இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், மறைந்த விபி சந்திரசேகர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழக கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான வி.பி. சந்திரசேகர், மயிலாப்பூரில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். காஞ்சி வீரன்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளரான இவர், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மயிலாப்பூர் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான காவல்துறையினர், சந்திரசேகரின் உறவினரிடம் விசாரித்து வருகின்றனர்.
விபி சந்திரசேகரின் உடல் அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், விபி சந்திரசேகர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தொடக்க காலத்தில் சென்னை குருநானக் கல்லூரியில் பயிற்சி மேற்கொண்ட போது சந்திரசேகருக்கும் டிராவிட்டுக்கும் இணக்கமான நட்பு இருந்தது. ராகுல் டிராவிட்டிற்கு சுவீட் சாட் ஆட கற்றுக்கொடுத்ததே தான்தான் என விபி சந்திரசேகர் ஊடகங்களில் பலமுறை சொல்லியிருக்கிறார்.
மேலும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லஷ்மணன் இன்னும் சற்று நேரத்தில் அஞ்சலி செலுத்த வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தினேஷ் கார்த்திக் , விஜய் சங்கர், முரளி விஜய், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், வர்ணனையாளர்கள், பயிற்சியாளர்கள், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் அவரது இல்லத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாளை காலை 9 மணிவரை அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.