பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் ராகுல் பஜாஜ் மே மாதம் 1-ம் தேதி முதல் ராஜினாமா செய்ய இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதன் புதிய தலைவராக நீரஜ் பஜாஜ் நியமனம் செயய்ப்பட்டிருக்கிறார்.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக பஜாஜ் திகழ்கிறது. புனே, அவுரங்காபாத் மற்றும் பந்த்நகர் (உத்தராகண்ட் மாநிலம்) ஆகிய இடங்களில் வாகன உற்பத்தி ஆலை இருக்கிறது. இந்நிறுவனத்தில் 1972-ம் ஆண்டு முதல், நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் ராகுல் பஜாஜ் இருந்துவருவதால், அவரின் ராஜினாமாவை, நிறுவனமே முன்வந்து அறிவித்திருக்கிறது. இவரது இந்த விலகலை இயக்குநர் குழு முழுமனதுடன் ஏற்றுக்கொண்டது.
“கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பல முக்கிய பொறுப்புகளை ராகுல் பஜாஜ் வகித்திருக்கிறார். குறிப்பாக நிறுவனத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்திருக்கிறார். ஒவ்வொரு காலத்திலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டிருக்கிறார்” என, இயக்குநர் குழு தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. ராகுல், ஹார்வேர்ட் நிர்வாக கல்லூரியில் நிர்வாகம் படித்திருக்கிறார். தவிர இவரது செயல்பாட்டுக்காக இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி இருக்கிறது.
ராகுல் பஜாஜ் ராஜினாமா அறிவிப்பு மட்டுமன்றி, மார்ச் காலாண்டு முடிவினையும் பஜாஜ் ஆட்டோ வெளியிட்டிருக்கிறது. மார்ச் காலாண்டில் நிகர லாபம் 2 சதவீதம் உயர்ந்து ரூ.1,332 கோடியாக இருக்கிறது. நிறுவனத்தின் வருமானம் 26 சதவீதம் உயர்ந்து ரூ.8,596 கோடியாக இருக்கிறது. மேலும் நிறுவனம் ஒரு பங்குக்கு 140 ரூபாய் டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்திருக்கிறது.