இந்தியா

கட்கரியை திடீரென புகழ்ந்த ராகுல்

கட்கரியை திடீரென புகழ்ந்த ராகுல்

webteam

பாஜகவில் சிறிதளவேனும் தைரியம் கொண்ட ஒரே நபர் நிதின் கட்கரிதான் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கட்சி தொண்டர்களுடன் பொறுப்பு வாரியாகவும் மாநிலம் வாரியாகவும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் உரையாற்றுவது வழக்கம். 

அந்த வகையில், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாஜக மாணவர்கள் அணிக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது பேசிய அவர், “தான் நாட்டுக்காகவும், பாஜகவுக்கும் மட்டுமே வாழ்வதாக கூறும் பலரை சந்தித்துள்ளேன். தன் வாழ்வை கட்சிக்கு அர்ப்பணிக்க உள்ளதாகவும் கூறுவார்கள். நான் ஒருவரிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்கள் குடும்ப நிலை என்ன என்று கேட்டேன். அதற்கு பதிலளித்த அவர், தான் கடை நடத்தியதாகவும் சரியான வியாபாரம் இல்லை என்பதால் கடையை மூடிவிட்டதாக தெரிவித்தார். மேலும் தனக்கு மனைவி, குழந்தைகள் இருப்பதாகவும் அவர் கூறினார். 

அப்போது, அவரிடம் முதலில் குடும்பத்தை கவனியுங்கள் என்று நான் அறிவுரை கூறினேன். குடும்பத்தை கவனிக்க முடியாதவரால் நாட்டை கவனிக்க முடியாது. முதலில் உங்கள் குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனியுங்கள். பிறகு நாட்டுக்கும் கட்சிக்கும் பணியாற்றுங்கள் என்று நான் கூறினேன்'' எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், பாஜகவில் சிறிதளவேனும் தைரியம் கொண்ட ஒரே நபர் நிதின் கட்கரிதான் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவில் சிறிதளவு தைரியம் கொண்ட ஒரே நபர் நிதின் கட்கரி என்றும், ரபேல் விவகாரம், விவசாயிகளின் துயரம் மற்றும் சிபிஐ, ஆர்பிஐ போன்றவற்றின் அழிவு குறித்தும் கட்கரி பேச வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.