இந்தியா

ரஹ்மான், ஹிரித்திக் ரோஷனையும் கவர்ந்தார் ஆசிரியர் பகவான் !

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெள்ளியகரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ள பகவான் என்பவர் பணியிட மாறுதல் பெற்றுள்ளார். அவர் பணி மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லக் கூடாது என நேற்று மாணவர்களும் பெற்றோரும் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் பணிமாறுதல் பெற வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் சூழ்ந்து கொண்டு கதறி அழுதனர்.

வேறுபள்ளிக்கு செல்லக்கூடாது என ஆசிரியரிடம் மாணவர்கள் மன்றாடினர். பள்ளியில் இருந்த மற்ற ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். இருப்பினும் ஆங்கில ஆசிரியரை பிரிய மனம்இல்லாமல் மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதது காண்போரை மனம் உருகச் செய்தது.

இந்நிலையில் ஆசிரியர் பகவானின் பணியிடை மாறுதலை தாற்காலிகமாக அரசு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பகவானை மாணவர்கள் சூழந்துக்கொண்டு அழும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஆசிரியர் பகவான் குறித்த செய்தி ஆங்கில ஊடகங்களிலும் வேகமாக பரவியது.

இதனையடுத்து பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் " ஆசிரியர் மாணவர் இடையிலான இந்த உறவும் உணர்வும் என் நெஞ்சை உறுக்குகிறது" என பதிவிட்டுள்ளார்.

மேலும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் "குரு சிஷ்யர்கள்" என பதிவிட்டு ஆங்கில ஊடக செய்தியை ரீட்வீட் செய்துள்ளார்.