இந்தியா

லண்டனில் சொத்து வாங்கியதில் பணமோசடி : ராபர்ட் வதேராவுக்கு முன் ஜாமீன்

லண்டனில் சொத்து வாங்கியதில் பணமோசடி : ராபர்ட் வதேராவுக்கு முன் ஜாமீன்

webteam

லண்டனில் சொத்து வாங்கியதில் பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு முன் ஜாமீன் வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

லண்டனில் சொத்து வாங்கியதில் பணமோசடி செய்ததாக பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சட்ட விரோத பணப்பரிவர்த்தனை மூலம் லண்டனில் வதேரா வீடு வாங்கியதாக அமலாக்கத்துறை வழக்கு தொடுத்தது.

இது தொடர்பாக முன்ஜாமீன் கோரி ராபர்ட் வதேரா டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கவேண்டியது அவசியம் என அமலாக்கத்துறை வாதிட்டது.

இந்த வழக்கு கருப்புப் பண தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது எனக் குறிப்பிட்ட அமலாக்கத்துறை , இது அரசியலாக்கப்படுவது துரதிருஷ்டவசமானது என்றும் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறைக்கு ஒத்துழைக்குமாறு வதேராவுக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

ஆனால் வழக்கு விசாரணையை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராபர்ட் வதேரா மற்றும் அவரது நெருங்கிய நண்பர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என ராபர்ட் வதேராவுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் ரூ.5 லட்சம் பிணைத்தொகை செலுத்தி முன் ஜாமீன் பெற்றுக் கொள்ள இருவருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.