இந்தியா

ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை

ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை

ஜா. ஜாக்சன் சிங்

குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில், அந்நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, இன்றும் நாளையும்
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் டோக்கியோ சென்ற பிரதமர் மோடியை ஜப்பான் அமைச்சர்கள் வரவேற்றனர். ஜப்பான்வாழ் இந்திய மக்களும் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

ஜப்பானில் நடைபெறவிருக்கும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கும் குவாட் அமைப்பின் 2-வது உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்க உள்ளார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை மோடி வெளியிட்டுள்ளார்.

அதில், "இந்தியா, ஜப்பான் மற்றும் உலகளாவிய கூட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதை தான் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். சர்வதேச பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்க இந்த பயணம் நல்ல வாய்ப்பாக அமையும். குவாட் மாநாட்டில் பங்கேற்கும் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உடனான சந்திப்பை எதிர்நோக்கி உள்ளேன். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது பற்றியும் ஆலோசனை நடத்தவுள்ளேன்" என அவர் கூறியுள்ளார்.