தமிழக -கேரள எல்லையை இணைக்கும் கேரள குமுளியில் “சிப்ஸ்” மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்குள் இருந்து 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.
கேரள எல்லைக்குள் உள்ள கடைக்கும் தமிழக வன எல்லைக்கும் இரண்டு மூன்று நாட்களாக இந்த மலைப்பாம்பு வந்து சென்றதற்கான தடயங்கள் இருந்தன. இந்நிலையில் கடைக்குள் இருந்த மலைப்பாம்பை கண்காணித்த கடைக்காரர் பாம்பை பிடித்து கடைக்கு வெளியே கொண்டு வந்தார். பின் சுவாசிக்க ஏதுவான துளைகள் போடப்பட்ட ஒரு சாக்கு பையில் மலைப்பாம்பை போட்டு கட்டினார். இதனைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் கூடினர். மலைப்பாம்பு பிடிபட்டதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தமிழக வனத்துறையினர் இது தங்கள் எல்லையில் நடமாடிய பாம்பு என உரிமை கோரினர். அதற்குள் கேரள வனத்துறையினருக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தமிழக வன எல்லையில் இருந்து வந்த மலைப்பாம்பு என்றாலும், அது பிடிபட்டது கேரளாவிற்கு உட்பட்ட பகுதி என்பதால், மலைப்பாம்பு எங்களுக்கே சொந்தம் என அவர்களும் சொந்தம் கொண்டாடினர்.
இதனால், சில மணி நேரம் தமிழக கேரள எல்லையில் சிக்கிய மலைப்பாம்பு சாக்கு பைக்குள் கிடந்து தவித்தது. ஒரு வழியாக, அது கேரளாவிற்கே சொந்தம் என்ற முடிவு எட்டப்பட்டது. பின்னர், தமிழக வனத்துறையும் ஒதுங்கிக்கொண்டது. கேரள வனத்துறையினர் பிடிபட்ட மலைப்பாம்பை, கொண்டு சென்று தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனத்திற்குள் விட்டனர். நிம்மதி பெருமூச்சோடு தமிழக மலைப்பாம்பு கேரள வனத்திற்குள் சென்று மறைந்தது