இந்தியா

தங்க மங்கை பி.வி.சிந்துவின் சாதனைக் களங்கள் !

தங்க மங்கை பி.வி.சிந்துவின் சாதனைக் களங்கள் !

webteam

தங்க மங்கை பி.வி.சிந்துவின் சாதனைக் களங்கள் ! 

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் பி.வி.சிந்து. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் நான்கு பட்டங்களை வென்றுள்ள பி.வி. சிந்துவின் சாதனைக் களங்களை தெரிந்து கொள்வோம்.

உலக சாம்பியன்ஷிப்: 2014-ஆம் ஆண்டு வெண்கலப்பதக்கம்

ஹைதராபாத்தை சேர்ந்த 23 வயது இளம் நாயகி பி.வி.சிந்து, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 2013-ஆம் ஆண்டு பதக்க வேட்டையை தொடக்கினார். 2013-ஆம் ஆண்டு சீனாவில் குவான்சூ நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் வெண்கலப்பதக்கம் வென்றார். அதற்கு அடுத்த ஆண்டும் அரையிறுதி வரை முன்னேறி வெண்கலப்பதக்கம் வென்றார் சிந்து. 2014-ஆம் ஆண்டு டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கரோலின் மரினிடம் அரையிறுதியில் தோல்வியடைந்தார்.

உலக சாம்பியன்ஷிப்: 2017-ஆம் ஆண்டு வெள்ளிப்பதக்கம்

கடந்தாண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதியாட்டம் வரை முன்னேறினார். கடும் போராட்டம் மிகுந்த இறுதியாட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நசோமி ஒகுஹராவிடம் தோல்வியடைந்தார். இறுதியாட்டம் வரை முன்னேறியதையடுத்து சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் கிட்டியது. இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாவது பதக்கத்தை வென்று வரலாற்றை தன்வசப்படுத்தினார். இந்தாண்டு அதே நசோமி ஒகுஹராவை காலிறுதியில் எளிதில் தோற்கடித்திருந்தார் சிந்து.

மக்காவ் ஓபனில் ஹாட்ரிக் பட்டம் வென்ற சிந்து

ஓபன் மாஸ்டர்ஸ், சூப்பர் சீரிஸ் போன்ற பெரும் போட்டித் தொடர்களில் 10 பட்டங்களை வென்றிருக்கிறார் சிந்து. இதில் அதிகபட்சமாக மக்காவ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மூன்று முறை பட்டம் வென்றிருக்கிறார். 2014-ஆம் ஆண்டு தொடங்கி 2016-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மக்காவ் ஓபனில் ஹாட்ரிக் பட்டம் வென்றிருக்கிறார்.

உலக சாம்பியன்ஷிப்: சிந்துவின் தீராத தங்கப்பதக்க தாகம்

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தாண்டு ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டார் சிந்து. ஒலிம்பிக் இறுதியாட்டத்தில் வாங்கிய தோல்விக்கு பதிலடி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இந்திய பேட்மிண்டன் ரசிகர்களிடம் மேலோங்கியிருந்தது. ஆனால் கரோலினா மரின் தமது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்தினார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெள்ளிப்பதக்கத்துடன் உலக சாம்பியன்ஷிப் போட்டியை நிறைவு செய்திருக்கிறார் சிந்து. கரோலினா மரினுக்கு பதிலடி கொடுக்க மற்றொரு பெரும் போட்டித் தொடரை எதிர்நோக்கியிருக்கிறார் சிந்து.