திருப்பதி தீர்த்தவாரி PT
இந்தியா

திருப்பதி: கோவிலின் ‘புனித தன்மையை மீட்டெடுக்க’ யாகங்கள், ஹோமங்கள் நடத்திய பட்டாச்சாரியார்கள்...!

PT WEB

ஒரு கோவிலின் புனிததன்மை கெட்டுவிட்டதாக கருதப்பட்டால், அங்கே ஆகம முறைப்படி யாகங்கள், சாந்திகள் செய்யப்பட்டு, கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் திவ்யதேசங்களில் ஒன்றான திருப்பதியில், லட்டு பிரசாதத்தில் மாமிச கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக கடந்த வாரம் ஒரு புகார் எழுந்தது.

திருப்பதி லட்டு

இதனால் கோவிலானது புனிததன்மையை இழந்துவிட்டதாக சிலர் நினைத்துள்ளனர். இது மக்களிடையே பேசுபொருள் ஆகிவிட்டது... இதற்கிடையே புரட்டாசி என்பதால் திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவம் நடைப்பெற்று வருகிறது. ஆகவே திருப்பதி கோவிலைப் ‘புனிதமாக்கவும்’, கலப்படம் செய்யபப்பட்ட லட்டு பிரசாத தோஷ நிவர்த்திக்காகவும், கோவிலில் பல யாகங்களும் சாந்திகளும் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் கோவிலைப் புனிதமாக்க யாகசாந்தி இன்று நடந்துள்ளது. தொடர்ந்து ஏழுமலையான் கோவில், பிரசாத தயாரிப்பு கூடங்கள், லட்டு விற்பனை கவுண்டர் ஆகியவற்றில் கோமிய தாரனம், குங்கிலிய புகை தாரனம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.

இதில் கோவிலை சுற்றியும் உள்ள பிரசாத தயாரிப்பு கூடங்கள், லட்டு விநியோக கவுண்டர்கள், நடைபாதைகள், சன்னதிகள், என்று பல இடங்களிலும் கோமியம் தெளிக்கப்பட்டு, குங்கிலிய புகை சமர்ப்பணம் செய்யப்பட்டு, கோவில் புனிதமாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்பதற்காக நேற்று முதல் 11 நாட்கள் பரிகார விரதத்தை தொடங்கியுள்ளார் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.