திருப்பதியில் பிரமோற்சவம் முடிந்த நிலையில் புரட்டாசி மாதத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் 36 மணி நேரம் காத்திருந்து இலவச தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் கடந்த 27-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ஆம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு தரிசனம், விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பிரமோற்சவம் முடிந்ததை அடுத்து திருமலையில் சாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் பக்தர்கள் தங்கும் அறைகள் நிரம்பி சாமி தரிசனம் செய்ய 5 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலவச தரிசனத்திற்கு 36 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. புரட்டாசி மாதம் என்பதாலும், 3-வது வார சனிக்கிழமை என்பதாலும் திருமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதில் பெரும்பான்மையானவர்கள் தமிழக பக்தர்கள் என கூறப்படுகிறது.