viral video image x page
இந்தியா

பஞ்சாப் | வீட்டில் சுவர் ஏறிக் குதித்த கொள்ளையர்கள்.. தனியாளாய் தடுத்து நிறுத்திய பெண்.. #ViralVideo

பஞ்சாப்பில் தன் வீட்டில் கொள்ளையடிக்க வந்த மூன்று கொள்ளையர்களை வீட்டுக்குள் நுழைய முடியாமல் சாதுர்யமாகத் தடுத்த பெண்ணின் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Prakash J

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜக்ஜீத் சிங். நகை வியாபாரியான இவருக்கு மந்தீப் கவுர் என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி மாலை, ஜக்ஜீத் சிங் வீட்டில் இல்லாத சமயத்தில் முகமூடி அணிந்த 3 நபர்கள், சுவர் ஏறி குதித்து அவரது வீட்டுக்குள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது வீட்டில் இருந்த மந்தீப் கவுர், கொள்ளையர்கள் சுவர் ஏறி குதிப்பதைப் பார்த்துவிட்டார். இதையடுத்து துரிதமாகச் செயல்பட்ட அவர், கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழையாமல் தடுக்கும்வண்ணம் வீட்டின் முன்பக்க கதவை மூட முயல்கிறார். மேல் தாழ்ப்பாளைப் போட்ட நிலையில், திருடர்கள் வந்துவிடவே.. அவர்களை தடுக்கும்விதமாக மந்தீப் கவுர் கதவைத் திறக்கவிடாமல் அழுத்திப் பிடிக்கிறார். அப்போது கொள்ளையர்கள் கதவைத் திறக்க முயற்சி செய்கின்றனர்.

ஆனால், அவர்களுக்கு இடம்தராமல் தொடர்ந்து போராடும் மந்தீப் கவுர், கதவைத் திறக்க விடாமல் தாங்கிப் பிடித்தபடியே அருகில் இருந்த சோபாவை இழுத்து கதவோடு அணைத்துவைத்து கொள்ளையர்களை உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்துகிறார்.

பின்னர் தொலைபேசியை எடுத்து யாருக்கோ போன் செய்கிறார். இறுதிவரை ஒன்றும் செய்ய முடியாமல் கொள்ளையர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் தப்பியோடுகின்றனர். இந்த சம்பவம் முழுவதும் வீட்டின் வரவேற்பறையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கொள்ளையர்களுடன் மந்தீப் கவுர் போராடிக் கொண்டிருப்பதை, அவரது குழந்தைகள் பதற்றதுடன் பார்க்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

இதையும் படிக்க: ஈரான் வீசிய ஏவுகணைகள்... தப்பிக்க ஓடினாரா இஸ்ரேல் பிரதமர்? வைரல் வீடியோ.. உண்மை என்ன?

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள மந்தீப் கவுர், “எனது குழந்தைகள் இன்னும் அதிர்ச்சியில் உள்ளனர். கொள்ளையர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வரும் நிலையில், பெண் போலீஸ் அதிகாரி ஏ.கே.சோஹி, ”கொள்ளை முயற்சியை விசாரித்து வருகிறோம். குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

துணிச்சலாகவும், சாதுர்யமாகவும் செயல்பட்ட மந்தீப் கவுரை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிக்க: டெஸ்ட் தரவரிசை | முதலிடத்துக்கு முன்னேறிய பும்ரா.. கீழிறங்கிய அஸ்வின்.. Top10 இடத்துக்குள் கோலி!