மாதிரிப்படம் pt web
இந்தியா

20 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் தாக்கியதில் பெண் மரணம்... சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவலம்!

20க்கும் மேற்பட்ட தெருநாய்களால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Angeshwar G

பஞ்சாப்பில் உள்ள கபுர்தலா மாவட்டத்தில் உள்ள பஸ்சன் கடிம் கிராமத்தில் வசிப்பவர் பாரி தேவி. 32 வயதான இவர் தனது கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்கச் சென்ற போது தெருநாய்கள் கடித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நெடு நேரமாகியும் பாரிதேவி வீடு திரும்பாததால் அவரது கணவர் ஊரில் உள்ள பிற மக்களுடன் சேர்ந்து தேடத் துவங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் அவரது உடல் சுல்தான்பூர் லோதி எனும் பகுதியில் விலங்குகளின் சடலங்களை கொட்டும் இடத்திற்கு அருகில் உள்ள வயல்வெளிகளில் சிதைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இத்தம்பதிக்கு ஒன்பது மாதம், 6 வயது மற்றும் 10 வயது என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இறந்தவரின் கணவரான கேவல் தாக்கூர் இதுகுறித்து கூறுகையில், “எனக்கு ஒன்பது மாத குழந்தை உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். இனி அவர்களை எப்படி வளர்ப்பேன்.? எங்களுக்கு யார் உதவுவார்கள்?” என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறு வயது குழந்தை ஒன்றும் தெருநாய்கள் கடித்த நிலையில் உயிரிழந்திருந்தது. வேறொரு பெண்ணும் தெருநாய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாரி தேவியும் தெரு நாய்களால் உயிரிழந்துள்ளார். தெருநாய்களுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியில் வரவே பயப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே கிராமத்தை சேர்ந்த ஒரு குழந்தை, இரு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் தெருநாய்களால் பாதிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, துணை ஆணையர் அமித்குமார் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கால்நடை அதிகாரிகள், பிற துறை அதிகாரிகள் இணைந்து இந்த பிரச்னையை தீர்க்கவும், நாய்த்தொல்லைகளை கட்டுப்படுத்தவும், அவற்றை அப்பகுதியில் இருந்து வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் நிதியுதவி அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.