இந்தியா

மீண்டும் முகக் கவசத்தை கட்டாயமாக்கும் மாநிலங்கள்; 4-வது அலை சாத்தியமா? - ஓர் பார்வை

மீண்டும் முகக் கவசத்தை கட்டாயமாக்கும் மாநிலங்கள்; 4-வது அலை சாத்தியமா? - ஓர் பார்வை

சங்கீதா

கொரோனா அதிகரித்து வருவதால், பஞ்சாபில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாபிலும் முகக்கவசம் அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதமும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா பரவல் நிலவரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

ஒமைக்ரான் வகை மாறுபாடு காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் விரைவில் நான்காம் அலை உருவாகலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ள சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக தேசிய அளவில் கொரோனா தினசரி பரவல் விகிதம் 0.53 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக தினமும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான நபர்கள், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கிறது மத்திய அரசு. இந்தியாவைப் பொருத்தமட்டில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதியிலிருந்து அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளையும் தளர்த்தி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இதன் காரணமாக நாட்டில் வழக்கமான சேவைகள் அனைத்தும் மீண்டும் தொடங்கியுள்ளது. குறிப்பாக பண்டிகைகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் டெல்லி, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மெல்ல, மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தேசிய அளவில் யூனியன் பிரதேசமான தலைநகர் டெல்லியில் தான், கொரோனா பரவல் உச்சத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியை பொருத்தமட்டில் தினமும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தலைமையில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் கூட்டப்பட்டு பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதமாக ரூ.500 விதிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் பொது இடங்களில் முகக்கவசத்தை அணிவதை கட்டாயமாக்கி இருக்கிறது. கொரோனா பரவலை அடுத்து கேரளா, டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, மிசோரம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கட்டுப்பாடுகள் விதிக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கொரோனா பரிசோதனையில் மரபணு மாற்ற பரிசோதனை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது தேசிய அளவில் நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக 13 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் மட்டும் 56 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்தாலும், கொரோனா நான்காவது அலை உருவாகாது என இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் ஆர்.கங்ககேத்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, மாநில அரசுகளை மத்திய சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது மட்டுமே, இந்தியாவில் கொரோனா 4-ம் அலை உருவாகாமல் தடுப்பதற்கு சிறந்த தீர்வாகும் என தெரிவிக்கிறது மத்திய அரசு.

- செய்தியாளர் விக்னேஷ்முத்து