இந்தியா

பாலியல் வன்கொடுமை - 4 ஆண்டுகளுக்கு பின் வழக்குப்பதிவு செய்த போலீசார்!

பாலியல் வன்கொடுமை - 4 ஆண்டுகளுக்கு பின் வழக்குப்பதிவு செய்த போலீசார்!

ச. முத்துகிருஷ்ணன்

மொஹாலியில் 2018 ஆம் ஆண்டு பெண் ஊழியர் ஒருவர் தன் முதலாளி மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளித்த நிலையில், 4 ஆண்டுகள் கழித்து முதலாளி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை!

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 2018 ஆம் ஆண்டு 38 வயதான திருமணமான பெண் ஊழியர் ஒருவர் தனியார் சுகாதார நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது 32 வயது நிரம்பிய அவரது நிறுவன உரிமையாளருடன் நட்பாக பழகியுள்ளார். இந்நிலையில் தனது நிறுவன உரிமையாளர் தனக்கு குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக மொஹாலி மூத்த காவல் கண்காணிப்பாளரிடம் (எஸ்எஸ்பி) புகார் அளித்தார். மேலும் அச்சமயத்தில் சில தவறான புகைப்படங்களை எடுத்து தன்னை மிரட்டி பணம் பறித்ததாகவும் புகாரில் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளர் விசாரணையை துவக்கினார். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு நிறுவன உரிமையாளர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376, 408, 420 மற்றும் 381 ஆகியவற்றின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆதாரங்களை சேகரித்து, வாக்குமூலங்களை பதிவு செய்ய கால அவகாசம் தேவைப்பட்டதாகவும் விசாரணை முடிவடைந்த நிலையில், சட்ட ஆலோசனை எடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி தலைமறைவாக இருப்பதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.