அம்ரித் பால் சிங், பல்விந்தர் கவுர் எக்ஸ் தளம்
இந்தியா

’அப்படி சொன்னால் அவர் என் தாயே இல்லை’ ’நான் காலிஸ்தான் ஆதரவாளர்தான்’- அம்ரித்பால் சிங் எம்.பி பதில்!

Prakash J

18வது மக்களவைத் தேர்தலில் வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவரும், காலிஸ்தான் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங், பஞ்சாப்பின் கதூர் சாகிப் தொகுதியில் மக்களவை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டார். இவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு அசாம் திப்ரூகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இவர் எம்பியாகப் பதவியேற்பதற்கு பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து, அவர் கடந்த ஜூலை 5ஆம் தேதி எம்பியாகப் பதவியேற்றுக் கொண்டார்.

மகன் பதவியேற்ற நிலையில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அம்ரித்பால் சிங்கின் தாயார் பல்விந்தர் கவுர், ”தனது மகன் (அம்ரித்பால்) காலிஸ்தானி ஆதரவாளர் இல்லை. பஞ்சாப் பற்றி பேசுவதும் பஞ்சாப் இளைஞர்களைக் காப்பாற்றுவதும்தான் அவரை காலிஸ்தானி ஆதரவாளராக ஆக்குகிறதா? அவர் அரசியலமைப்பின் வரம்பிற்குள் தேர்தலில் போட்டியிட்டார். இனி, அவரை காலிஸ்தானி ஆதரவாளர் என்று அழைக்கக்கூடாது. அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளார். அவர் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்குதான்!

தன் தாயாரின் இந்தப் பேட்டிக்குப் பிறகு அம்ரித் பால் சிங் அவரது குடும்பத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ‘கல்சா ராஜ்' கனவு குற்றமல்ல, பெருமைக்குரிய விஷயம். லட்சக்கணக்கான சீக்கியர்கள் இந்தக் கனவை நிறைவேற்ற தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். இந்தப் பாதையில் இருந்து ஒதுங்கி, நான் எப்போதாவது குடும்பத்தைத் தேர்வு செய்ய நேர்ந்தாலும், நான் எப்போதும் ’போராட்டத்தையே' தேர்வு செய்வேன் என்று பலமுறை கூறியுள்ளேன்.

சீக்கிய ராஜ்ஜியத்தில் சமரசம் செய்த கொள்வதைக்கூட கருத்தில்கொள்ள வேண்டாம், அதற்கு எதிராகப் பேசுவது ஒருபுறம் இருக்க வேண்டும்.

'சங்கத்' உடன் தொடர்புகொள்ளும்போது இதுபோன்ற தவறு எதுவும் இருக்கக்கூடாது. பண்டா சிங் பகதூர் உடன் வந்த சீக்கியர்கள் வீரமரணம் அடைந்த வரலாற்றுச் சம்பவத்துடன் இது நன்றாகப் பொருந்துகிறது, 14 வயது இளைஞரின் தாயார், ’அவர் சீக்கியர் அல்ல’ எனக் கூறி அவரைக் காப்பாற்ற முயன்றார். அப்போது அந்த இளைஞர், ’அந்தப் பெண் நான் சீக்கியன் அல்ல என்று சொன்னால், அவர் என் தாய் இல்லை’ என்றார். இந்த உதாரணம் இந்த சம்பவத்திற்கு மிகவும் கடுமையானது. ஆனால் கொள்கையளவில் இது புரிந்துகொள்ளத்தக்கது” என அந்த அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

இதையும் படிக்க: அசாம்: முக்கிய நதிகளில் அபாயக் கட்டத்தைத் தாண்டிய வெள்ளம்.. சுமார் 24 லட்சம் பேர் பாதிப்பு