பஞ்சாபில் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 424 விஐபிக்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை அம்மாநில அரசு அதிரடியாக திரும்பப் பெற்றிருக்கிறது.
பஞ்சாபில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸை தோற்கடித்து ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. முதல்வராக பகவந்த் மன் பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார். ஆம் ஆத்மி அரசு அமைந்தது முதலாக பஞ்சாபில் பல அதிரடி நிர்வாக மாற்றங்கள் அமலாகி வருகின்றன. அந்த வகையில், விஐபி கலாச்சாரத்தை ஒழிப்பதிலும் பஞ்சாப் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அதன்படி, கடந்த இரண்டு மாதங்களில் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என மொத்தம் 306 விஐபிக்களின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. இதற்கு பொதுமக்கள் ஆதரவு அளித்த போதிலும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று 424 விஐபிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை பஞ்சாப் அரசு அதிரடியாக ரத்து செய்தது. பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்ட விஐபிக்களில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், சீக்கிய அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.
இதுகுறித்து முதல்வர் பகவந்த் மன் விடுத்துள்ள அறிக்கையில், "பொதுமக்களின் தேவைக்காகவே பணியமர்த்தப்பட்டுள்ளனர். விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அல்ல. தற்போது 424 விஐபிக்களின் பாதுகாப்பு திரும்பப் பெற்றிருப்பதால் 400-க்கும் மேற்பட்ட போலீஸார் காவல் நிலைய பணிகளுக்கு திரும்பியுள்ளனர்" எனக் கூறியிருக்கிறார்.