இந்தியா

'இன்று முதல் எனது பெயரிலோ மனைவி பெயரிலோ சொத்து வாங்க மாட்டேன்' - சரண்ஜித் சிங்

'இன்று முதல் எனது பெயரிலோ மனைவி பெயரிலோ சொத்து வாங்க மாட்டேன்' - சரண்ஜித் சிங்

JustinDurai

'தம் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில்  இன்று முதல் சொத்து வாங்க மாட்டேன்' என்று உறுதியளித்துள்ளார் பஞ்சாப் முதலமைச்சர் வேட்பாளர் சரண்ஜித் சிங்.

பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. பஞ்சாபில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சி முனைப்பு காட்டி வருகிறது. பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சிங் சித்து இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த தேர்தலில் சரண்ஜித் சிங் சன்னி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

இதனிடையே பஞ்சாபில் சட்ட விரோத மணல் குவாரிகள், அவற்றுடன் தொடர்புடையவர்கள் மீது  அமலாக்கத் துறையினர் சமீபத்தில் நடத்திய சோதனையில், சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபிந்தர் சிங்குக்கு சொந்தமான இடங்களில் இருந்து 8 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வரின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தை முன்னிறுத்தி சரண்ஜித் சிங்கை விமர்சித்து ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன.  

இந்நிலையில், தம் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், இன்று முதல் தமது பெயரிலும் தமது மனைவி பெயரிலும் எந்த வித சொத்தும் வாங்கப் போவதில்லை, எந்த தொழிலும் செய்யப்போவதில்லை என்று பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னி உறுதியளித்துள்ளார்.

இதையும் படிக்க: பஞ்சாப் காங். முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் விலகல்