இந்தியா

பஞ்சாப் முதல்வருடன் மோதல்: சித்துவின் உள்ளாட்சி துறை பறிப்பு

பஞ்சாப் முதல்வருடன் மோதல்: சித்துவின் உள்ளாட்சி துறை பறிப்பு

webteam

பஞ்சாப்பில் முதல்வர் அமரீந்தர் சிங், அமைச்சர் சித்து இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. சித்துவுக்கு வழங்கப்பட்டிருந்த முக்கிய துறைகள் நேற்று திடீரென மாற்றப்பட்டன.

பஞ்சாப் மாநில உள்ளாட்சி மற்றும் சுற்றுலா, கலாசாரம் அருங்காட்சியக துறை அமைச்சராக இருந்தார் நவ்ஜோத் சிங் சித்து. அவருக்கும், அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கும் கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது, இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தனர். தனது மனைவி நவ்ஜோத் கவுர், அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடுவதை அமரீந்தர் சிங் தான் தடுத்தார் என்று சித்து குற்றம்சாட்டினார். 

பஞ்சாப் மக்களவை தேர்தலில் 13 தொகுதிகளில் காங்கிரஸ் 8 தொகுதியில் வென்றது. முழு அளவிலான வெற்றி கிடைக்காததற்கு சித்துவின் செயல்பாடுகள் தான் காரணம் என அமரீந்தர் குற்றம் சாட்டினார். உள்ளாட்சி துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றாததால், வெற்றி வாய்ப்பு பாதித்ததாகவும் அவர் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த சித்து கடந்த மாதம் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் சித்து புறக்கணித்தார். 

இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க அமரீந்தர் சிங் நேற்று கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டத்துக்கும் செல்லாமல் சித்து புறக்கணித்தார். 

இதையடுத்து சித்துவிடம் இருந்த உள்ளாட்சி துறை, சுற்றுலா மற்றம் பண்பாட்டுத்துறை பதவி பறிக்கப்பட்டு அவருக்கு மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை வழங்கப்பட்டுள்ளது.