இந்தியா

"3-வது முறையாக அவமானப்படுத்தப்பட்டுள்ளேன்" - பதவியை துறந்த பஞ்சாப் முதல்வர் அமரிந்தர்!

Sinekadhara

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில் முன்னதாகவே அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து பொறுப்பேற்றது முதல் அமரிந்தர் சிங்குக்கு எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர் இம்முடிவை எடுத்திருக்கிறார். தனது வீட்டில் வைத்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் கலந்தாலோசித்தபிறகு, சண்டிகரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் அமரிந்தர் சிங். சில மாதங்களில் பஞ்சாபில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இது முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

செய்தியாளர்களை சந்தித்து தனது ராஜினாமா குறித்து பேசிய அமரிந்தர் சிங், தான் கட்சித் தலைமையால் மூன்றாவது முறையாக அவமானப்படுத்தப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் யாரை நம்புகிறதோ அவரைத் தேர்வு செய்துகொள்ளட்டும் என்றும் கூறியிருக்கிறார்.  மேலும், “தற்போதுவரை காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன். எதிர்கால திட்டம் பற்றி விரைவில் அறிவிப்பேன். எனது ராஜினாமா முடிவு குறித்து ஏற்கெனவே சோனியா காந்தியிடம் தெரிவித்துவிட்டேன். கட்சியில் நிலவிய ஊழல் விவகாரங்கள் ஏற்படுத்திய அழுத்தமே ராஜினாமாவுக்கு காரணம்” எனத் தெரிவித்தார்.