பூஜா கேட்கர் எக்ஸ் தளம்
இந்தியா

புனே|IAS பெண் அதிகாரி மீது விழும் குற்றச்சாட்டுகள்..பணியிட மாற்றத்திற்குப் பிறகு வெளிவரும் தகவல்கள்!

அண்மையில் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று புனே உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்ட பூஜா கேட்கர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர் பூஜா கேட்கர். இவர் பயிற்சியின்போது தனது அதிகாரத்துக்கு மீறிய சில நடைமுறைகளை செய்துகொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இதுபோன்ற வசதிகள் கொடுக்கப்படுவதில்லை. இருந்தாலும், அவர் இந்த வசதிகளை கேட்டு உயர் அதிகாரிகளை நச்சரித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அதாவது சொந்த வாகனத்தில் மகாராஷ்டிர அரசு என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டதோடு, சைரன் ஒலியையும் பொருத்திக்கொண்டார். மேலும், புனே கூடுதல் கலெக்டர் அஜய் மோரே வெளியே சென்றபோது, அவரது அறையை முன் அனுமதியின்றி பூஜா கேட்கர் அபகரித்துக்கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதவிர, பூஜாவின் தந்தை ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி என்றும், அவர் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார் என்றும், தனது மகளின் விருப்பங்களை நிறைவேற்றுமாறு ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பூஜாவின் தந்தைக்கு 40 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும், ஆனால் இவரோ ஓபிசி பிரிவின்கீழ் இப்பதவிக்குத் தேர்வாகியிருப்பதாகவும், இவரது தேர்வே கேள்விக்குறியாக இருப்பதாகவும் சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: கீர்த்தி சக்ரா| வீரமரணம் அடைந்த கேப்டனின் மனைவியை இப்படி இழிவாக பேசலாமா! அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை

அது மட்டுமல்லாமல், அவர் பார்வை மாற்றுத்திறனாளி என சான்றிதழ் கொடுத்து தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி அவரது புகார்கள் தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்குச் செல்லவே புனே கலெக்டர் சுஹாஸ் திவாஸ், மகாராஷ்டிர தலைமைச் செயலாளரிடம் இதுகுறித்து விளக்கமளித்தார்.

அதன்பேரில், கேத்கர் வாஷிமுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். என்றாலும், அவர் பற்றிய தகவல்கள் வெளிவந்தபடியே உள்ளன. அந்த வகையில், அறையின் இருக்கை மற்றும் வாகனத்திற்கு சைரன் பொருத்தப்பட்டது குறித்து அவர் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிய விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதில், ’நான் சேர்வதற்கு முன்பு இத்தகைய செயல்களைச் செய்து முடிக்க வேண்டும்’ என தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்பி மிலிந்த் தியோரா கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில், “ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர் மீதான குற்றச்சாட்டுகள் சேவைக்கு பெரும் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் சேவை செய்வதற்காக அரசாங்கத்தில் இருக்கிறீர்களா அல்லது உரிமை காரணமாக இருக்கிறீர்களா? இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தாமதமின்றி விரிவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு மகாராஷ்டிர தலைமைச் செயலாளரை நான் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: உ.பி| பள்ளியில் தினம் 2 மணி நேரம் ’கேண்டி கிரஷ்’ விளையாட்டு; ஆய்வின்போது சிக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்!

மேலும் அவர், ”எங்கள் நிர்வாக சேவையில் நீதியை உறுதிப்படுத்துவதும், பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணுவதும் மிக முக்கியம். UPSC பொதுச் சேவைக்கு உயர் தகுதி வாய்ந்த அதிகாரிகளை உருவாக்குவதற்குப் பெயர் பெற்றது. தகுதி மற்றும் நெறிமுறைகள் இல்லாதவர்கள் பொதுவில் இருக்கத் தகுதியற்றவர்கள்”எனத் தெரிவித்துள்ளார்.

எனினும் இதுகுறித்து பதிலளித்த பூஜா கேட்கர், “இந்த விஷயம் பற்றிப் பேச தனக்கு அதிகாரம் இல்லை. என்றாலும், தனது புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ம.பி| ”நீ கறுப்பு.. உன்னை எனக்குப் பிடிக்கல”- நிறத்தைச் சுட்டிக்காட்டி கணவனைப் பிரிந்து சென்ற மனைவி!