பூஜா கேட்கர், திலிப் கேட்கர் எக்ஸ் தளம்
இந்தியா

தொடரும் குற்றச்சாட்டுகள்! சூடுபிடிக்கும் விசாரணை- பதவி பறிபோகுமா?பெண் IAS அதிகாரியின் தந்தை பதில்

பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வரும் பூஜா கேட்கர் மீது விழுந்த குற்றச்சாட்டுகளால், அவரது பதவி பறிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Prakash J

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர் பூஜா கேட்கர். இவர் பயிற்சியின்போது தனது அதிகாரத்துக்கு மீறிய சில நடைமுறைகளை செய்துகொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அதாவது சொந்த வாகனத்தில் மகாராஷ்டிர அரசு என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டதோடு, சைரன் ஒலியையும் பொருத்திக்கொண்டார். மேலும், புனே கூடுதல் கலெக்டர் அஜய் மோரே வெளியே சென்றபோது, அவரது அறையை முன் அனுமதியின்றி பூஜா கேட்கர் அபகரித்துக்கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதவிர, பூஜாவின் தந்தை ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி என்றும், அவர் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார் என்றும், தனது மகளின் விருப்பங்களை நிறைவேற்றுமாறு ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பூஜாவின் தந்தைக்கு 40 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும், ஆனால் இவரோ ஓபிசி பிரிவின்கீழ் இப்பதவிக்குத் தேர்வாகியிருப்பதாகவும், இவரது தேர்வே கேள்விக்குறியாக இருப்பதாகவும் சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: ’ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’- காதலருக்கு நம்பிக்கை கொடுத்த கவிஞன்..தொலைவுக்கு அப்பால் சென்ற ரவி ஷங்கர்!

அது மட்டுமல்லாமல், அவர் பார்வை மாற்றுத்திறனாளி என சான்றிதழ் கொடுத்து தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி அவரது மீதான புகார்கள் தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்குச் செல்லவே புனே கலெக்டர் சுஹாஸ் திவாஸ், மகாராஷ்டிர தலைமைச் செயலாளரிடம் இதுகுறித்து விளக்கமளித்தார். அதன்பேரில் அவர், கேத்கர் வாஷிமுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். என்றாலும், அவர் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளிவந்தபடியே உள்ளன.

தற்போதுகூட, இவரின் தாய் மனோரமா கேட்கர், விவசாயி ஒருவரின் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றபோது, அந்நிலத்திற்கு சொந்தமான விவசாயி தர இயலாது என எதிர்த்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மனோரமா தனது பாதுகாவலர்களுடன் கையில் துப்பாக்கியுடன் சென்று, அந்த விவசாயியை மிரட்டியுள்ளார். இதனை உள்ளூர் நபர் ஒருவர் விடியோவாக பதிவு செய்யவே, இது சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மேலும், இந்நபர் அளித்த புகாரின் பேரில் பூஜா கேட்கர் பெற்றோரும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

இதையும் படிக்க: தடுமாற்றத்தின் உச்சம்| உக்ரைன் அதிபரை ‘புடின்’ என தவறாக அழைத்த ஜோ பைடன்.. அதிபர் தேர்தலில் மாற்றமா?

இந்த நிலையில், பூஜா மீதான இரண்டு புகார்கள் குறித்தும் மத்திய மற்றும் மாநில அரசுகள் விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளன. மத்திய அரசு நடத்தி வரும் விசாரணை அறிக்கை விபரம் மகாராஷ்டிரா அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அதன் அடிப்படையில் மகாராஷ்டிரா அரசு பூஜாவை பணி நீக்கம் செய்யலாம் என்றும், தவறு உறுதி செய்யப்பட்டால் பூஜா மீது கிரிமினல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதனால் அவரது பதவி பறிக்கப்படலாம் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் குறித்து முதல்முறையாக பேட்டியளித்த பூஜா கேட்கரின் தந்தை திலீப் கேட்கர், “என் மகள் எந்தத் தவறும் செய்யவில்லை. இதுகுறித்து விசாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. எனவே இறுதி முடிவுக்காக காத்திருப்போம். யாரோ வேண்டுமென்றே என் மகளை மாட்டிவிட முயற்சி செய்கிறார்கள். இதுகுறித்து விசாரணைக் குழுவின் முன் எங்களின் கருத்தை முன்வைப்போம். சட்டப்பூர்வ செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது. எது நடந்தாலும் எல்லாமே விதிப்படிதான் நடந்தது, எந்த தவறும் இல்லை." என்றார்.

இதையும் படிக்க: அபுதாபி| 4 வயது மகளுக்கு விநோத நோய்.. தன் கல்லீரலைக் கொடுத்து காப்பாற்றிய ’பாசக்கார’ இந்திய தந்தை!