burger king x page
இந்தியா

Burger King பெயரில் புனேயில் விற்பனை| வழக்கு தொடர்ந்த அமெரிக்க நிறுவனம்.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

Prakash J

புனேவைச் சேர்ந்த அனாஹிதா மற்றும் ஷபூர் இரானி தம்பதி, தங்களுடைய உணவகத்திற்கு ’பர்கர் கிங்’ என்று சூட்டியிருந்தது. இதற்கு நிரந்தர தடைவிதிக்கக் கோரி, பர்கர் கிங் கார்ப்பரேஷன், கடந்த 2011ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும், புனேவைச் சேர்ந்தவர்கள் தங்களது நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்துவதால் அதன் பிராண்டு நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டுகிறது. இதனால், அந்த நிறுவனம் ரூ.20 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் எனக் கோரியிருந்தது.

13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த சட்டப்போராட்டத்திற்கு கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. மாவட்ட நீதிபதி சுனில் வேத்பதக் வழங்கிய அந்த தீர்ப்பில், “அமெரிக்க நிறுவனம் தனது வர்த்தக முத்திரையை இந்தியாவில் பதிவுசெய்வதற்கு முன்பே, புனேவைச் சேர்ந்த உரிமையாளர்கள், ’பர்கர் கிங்’ என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளனர். 1992ஆம் ஆண்டு முதல் ஈரானியர்கள், ‘பர்கர் கிங்’ என்ற பெயரில் இயங்கி வந்துள்ளனர். பல ஆண்டுகளாக, புனே நிறுவனம் தொடர்ந்து 'பர்கர் கிங்' பெயரில் இயங்கி வந்துள்ளது. மேலும், புனே நிறுவனம் எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது அல்லது அதன் பிராண்டிற்கு தீங்கு விளைவித்தது என்பதற்கு பர்கர் கிங் கார்ப்பரேஷன் கணிசமான ஆதாரங்களை வழங்கத் தவறிவிட்டது. ஆகையால், இவ்வழக்கு நிராகரிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தது.

இதையும் படிக்க; அமெரிக்க அதிபர் தேர்தல்: கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை.. உருவரீதியாகச் சீண்டும் ட்ரம்ப்!

பர்கர் கிங் கார்ப்பரேஷன் இந்தியாவில் பிராண்டு தொடர்பான வணிக சர்ச்சைகளை எதிர்கொள்வது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு (2023) டிசம்பர் மாதம், டெல்லி உயர் நீதிமன்றம், 'பர்கர் கிங் குடும்ப உணவகம்' என்ற பெயரில் இயங்கும் மற்றொரு நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது. மேலும், ஆகஸ்ட் 2023இல், நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் உள்ளூர் உணவகம் ஒன்றின் மனுவை தள்ளுபடி செய்தது.

1954இல் ஜேம்ஸ் மெக்லாமோர் மற்றும் டேவிட் எட்ஜெர்டன் ஆகியோரால் நிறுவப்பட்ட பர்கர் கிங் கார்ப்பரேஷன், இந்தியாவில் 400க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 13,000 கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது. இந்திய சந்தையில் விளம்பரங்களுக்காக $960 மில்லியன் முதலீடு செய்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த தீர்ப்பு அமெரிக்க நிறுவனத்திற்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: கொல்கத்தா மருத்துவர் கொலை | “முதல்வர் மீது நம்பிக்கை இல்லை” - குற்றஞ்சாட்டும் பெற்றோர்!