சமூக வலைதளங்களில் பகிரப்படக் கூடிய வீடியோக்கள் பலவற்றில் சில நெகிழ்ச்சியை உண்டாக்கக் கூடிய நிகழ்வாகவே இருக்கும். அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள உணவகம் ஒன்றில் முழுக்க முழுக்க காது கேளாத, வாய்ப் பேசாத மாற்றுத் திறனாளிகளே ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோதான் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் பகிரப்பட்டு பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அந்த வீடியோவில் ஊழியர்கள் எவ்வாறு பணியாற்றுகிறார்கள், வாடிக்கையாளர்களை எப்படி வரவேற்கிறார்கள் என அனைத்தும் தெளிவாக இடம்பெற்றுள்ளன.
அதன்படி, Terrasinne என்ற அந்த உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களை சைகை மொழியில் பணியாளர்கள் வரவேற்கிறார்கள். ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான தகவல்தொடர்புகளை எளிதாக்கும் எளிய மெனுவையும் வைத்திருக்கிறார்கள்.
ஊழியர்களுக்கு எளிதில் புரிய வைக்கும் வகையில் மெனுவில் உள்ள ஒவ்வொரு உணவு வகைகளுக்கும் சைகை மொழிக்கான குறியீடுகளையும் வைத்திருக்கிறார்கள். இந்த வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு உணவகம் சிந்தனையுடன் இருப்பதாகவும் பாராட்டை பெற்றிருக்கிறது.
இந்த உணவகம் குறித்த வீடியோ வைரலான நிலையில், “பார்ப்பதற்கே இனிமையாக இருக்கிறது. நிலையான குறிக்கோள் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இதுவே உதாரணமாக இருக்கிறது” என்றும், “இந்த ரெஸ்டாரன்ட்க்கு வருவது மதிப்புமிக்கது. இப்படி ஒரு நெகிழ்ச்சியான முன்னெடுப்பை மேற்கொண்ட உணவகத்தின் உரிமையாளருக்கு நான் ரசிகராகிவிட்டேன். தனித்துவமாக இருப்பதோடு, உணவின் தரமும் நன்றாக இருக்கிறது.” என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், Terrasinne உணவகத்தின் இணையதளத்தில், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே 160 மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.