விபத்தில் உயிரிழந்தவர்கள் pt web
இந்தியா

புனே விபத்து: குப்பையில் வீசப்பட்ட பரிசோதனை மாதிரிகள்.. மருத்துவர்களுக்கு காவலர்கள் வைத்த ட்விஸ்ட்!

புனே கார் விபத்தில் குற்றம் செய்தவரை தப்பிக்க வைக்க அவரது குடும்பத்தினர் தீவிரமாக செயல்படுவதும், அதற்கு சில காவல்துறையினரும் மருத்துவர்களுமே உடந்தையாக இருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

Angeshwar G

15 மணி நேரத்திலேயே வழங்கப்பட்ட ஜாமீன்

கடந்த 19 ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் உள்ள கல்யாண் நகர் பகுதியில் விலையுயர்ந்த Porsche ரக கார் அதிவேகமாக வந்துள்ளது. காரை 12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் இயக்கி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழக்க, அதிவேகமாக சென்று தனக்கு முன் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஐ.டி நிறுவன ஊழியர்கள் மேல் மோதியுள்ளது. இதனால் ஐடி ஊழியர்கள் இருவரும் பரிதாபகரமாக உயிரிழந்தனர். சாலையில் இருந்தவர்கள் காரை ஓட்டிய சிறுவனை பிடித்து விசாரித்ததும் அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

சிறுவன் கைது செய்யப்பட்டாலும், ‘300 வார்த்தைகளில் சாலை விபத்தின் விளைவுகள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கட்டுரை எழுத வேண்டும்’ என்றும், இதேபோன்ற இன்னும் ஒரு சில நிபந்தனைகளும் அச்சிறுவனுக்கு விதிக்கப்பட்டு, கைதான 15 மணி நேரத்திலேயே ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த விவகாரம் சர்ச்சை ஆனதும் வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, கைதான சிறுவன் சிறார் இல்லத்தில் அடைக்கப்பட்டார். முன்னதாகவே, காவல்துறை சிறுவனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஏனெனில், விபத்து நடந்து 8 மணி நேரம் கழித்துதான் சிறுவனுக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. சிறுவனுக்கு ஆதரவாக செயல்பட்ட விவகாரத்தில் எரவாடா காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டரும், மற்றொரு அதிகாரியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஓட்டுநரை மிரட்டி ஒப்புக்கொள்ள வைத்த சிறுவனின் குடும்பத்தினர்

அதேவேளையில் சிறுவனின் தந்தை, பார் உரிமையாளர்கள், பார் ஊழியர்கள் போன்றோர் மீதும் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சூழலில்தான் “என் மகன் காரை ஓட்டவில்லை, காரை ஓட்டியது ஓட்டுநர்” என்ற குண்டைத்தூக்கிப் போட்டார் சிறுவனின் தந்தை. அதன்பேரில் விசாரணைக்காக குடும்ப ஓட்டுநரும் சிறுவனின் தாத்தாவும் காவல்துறையால் அழைக்கப்பட்டனர். அப்போதுதான் மேலும் அதிர்ச்சிகர விஷயங்கள் அம்பலமானது.

“காரை நான் ஓட்டவில்லை. என்னை மிரட்டி, பணம் கொடுத்து குற்றத்தை நான் செய்ததாக, சிறுவனின் தாத்தாவும் தந்தையும் ஒப்புக் கொள்ள வைத்தனர்” என வாக்குமூலம் கொடுத்தார் ஓட்டுநர். இதன்பின்னர் தாத்தாவும், ஓட்டுநரை தவறான முறையில் சிறையில் அடைத்ததாக, 25 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் கைது செய்யப்பட்டார். அவரை மே 28 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குப்பையில் வீசப்பட்ட சிறுவனது பரிசோதனை மாதிரிகள் 

இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. சிறுவனிடம் இருந்து பெறப்பட்ட ரத்த பரிசோதனை முடிவுகளை இரு மருத்துவர்கள் திரித்து கூற முயற்சித்திருப்பது தெரியவந்துள்ளது. சிறுவனது ரத்தமாதிரிகள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு வேறொரு நபரது ரத்த மாதிரிகளை மாற்றியது தெரியவந்தது.

இதன்பேரில் இரு மருத்துவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் காவல்துறை நல்வாய்ப்பாக ரத்த மாதிரிகளை இரு வெவ்வேறு இடங்களில் பரிசோதனைக்காக கொடுத்திருந்துள்ளனர். அதனால் வோறொரு இடத்தில் கொடுக்கப்பட்டிருந்த பரிசோதனையின் முடிவுகளே உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இதற்கிடையே எர்வாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறுவனது தந்தை விஷால் அகர்வாலை, டிரைவரை கடத்திய வழக்கு தொடர்பாக காவலில் எடுத்து விசாரிக்க புனே நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

விபத்தில் உயிரை பறிகொடுத்தவர்களது உறவினர்கள் நீதிகேட்டு போராடி வருகின்றனர். விசாரணையை தங்களது மாநிலமான மத்தியப் பிரதேசத்துக்கு மாற்ற வேண்டுமெனவும், உச்சநீதிமன்றம் இதை கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

குற்றம் செய்தவரை தப்பிக்க வைக்க அவரது குடும்பத்தினர் தீவிரமாக செயல்படுவதும், அதற்கு சில காவல்துறையினரும் மருத்துவர்களுமே உடந்தையாக இருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.