இன்றைய உலகில் ஆன்லைன் வர்த்தகம் பலருக்கும் உதவியாக இருக்கிறது. அதன்மூலமாக அனைத்து வகையாகப் பொருட்களும் பெறப்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். அதேவேளையில், ஒருசில நேரங்களில் அதனால் பாதிப்புகளும் ஏற்படுவதாகப் புகார்களும் சொல்லப்படுகின்றன. அந்த வகையில், புனேயைச் சேர்ந்த ஒருவர், சைவ உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு அசைவ உணவு டெலிவரி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து புனேயைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அந்த பிரியாணி படத்தைப் பகிர்ந்து, ”புனேவின் கார்வே நகரில் உள்ள (ஜொமாட்டோ) பிகே பிரியாணி ஹவுஸில் பனீர் பிரியாணி ஆர்டர் செய்தேன். ஆனால், டெலிவரி செய்யப்பட்ட அந்த பிரியாணியில் சிக்கன் துண்டு இருந்தது. நான் சைவ உணவு உண்பவன். ஆனால், நாம் ஆர்டர் செய்த உணவில் சிக்கன் துண்டு இருந்தது என் மனதைப் பாதித்தது” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவு இணையத்தில் வைரலானது. அவருடைய பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து ஜொமாட்டோவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, ஜொமோட்டோவும் அவருக்குப் பதிவுக்குப் பதிலளித்திருந்தது. அதன் பதிவில், ”புகார்தாரரின் பில், போன் நம்பர் போன்றவற்றைச் சரிபார்க்க விரும்புகிறோம்” எனக் கேட்டுக் கொண்டது. அதன்பேரில் அவரும் அனுப்பிவைக்க, ஜொமோட்டோவும் அவர் ஆர்டர் செய்த தொகையை திருப்பிக் கொடுத்துள்ளது. என்றாலும், இந்த விவகாரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: பெண்கள் சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்தத் தடை.. வடகொரியா அதிரடி!
முன்னதாக, கடந்த பிப்ரவரியில் பெண் ஒருவர் குருகிராமில் உள்ள உணவகத்திலிருந்து Zomato ஆப்பின் மூலம் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததும், இதை, அந்தப் பெண் தன்னுடைய எக்ஸ் தளத்தில் எடுத்து வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கும், ஜொமாட்டோ பதிலளித்திருந்தது.
இதற்குமுன்பு, பெங்களூருவைச் சேர்ந்த ஹர்ஷிதா என்ற பெண் ஆர்டர்செய்த ஜொமாட்டோ சிக்கன் ஃபிரைடு ரைஸில் கரப்பான் பூச்சி இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க: சச்சின் டெண்டுல்கரின் காவலர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு விபரீத முடிவு!