இந்தியா

மனைவியை விஷ ஊசி போட்டு கொன்று தற்கொலை நாடகம் ஆடிய கணவன் - விசாரணையில் அம்பலம்!

மனைவியை விஷ ஊசி போட்டு கொன்று தற்கொலை நாடகம் ஆடிய கணவன் - விசாரணையில் அம்பலம்!

JustinDurai

செவிலியராக இருக்கும் கணவரிடம் போலீசார் துருவித்துருவி விசாரித்ததில் தனது மனைவியை அவர் விஷ ஊசி போட்டு கொன்றது அம்பலமானது.

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்த சாவந்த் மற்றும் பிரியங்கா தம்பதியருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்கள் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். தனியார் மருத்துவமனை ஒன்றில் சாவந்த் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி அன்று  சாவந்த் தனது மனைவி பிரியங்கா தற்கொலை முயற்சி செய்துள்ளார் எனக்கூறி அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு பிரியங்கா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கருத்து வேறுபாடு காரணமாக பிரியங்கா தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் சாவந்த் கூறினார். இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் சோதனை  செய்தபோது பிரியங்கா எழுதியாக கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தாம் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து சாவந்த் மீது குடும்ப வன்முறை, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே பிரியங்கா இறப்பு தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான நிலையில், அதில் பிரியங்காவின் ரத்தத்தில் மருத்துவத்திற்குப் பயன்படுத்தும் மருந்துப் பொருட்கள் கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே சாவந்த் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிவரும் நிலையில் இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சாவந்திடம் போலீசார் துருவித்துருவி விசாரித்ததில் பிரியங்காவை அவர் விஷ ஊசி போட்டு கொன்றது அம்பலமானது.

இதுகுறித்து காவல் ஆய்வாளர் மனோஜ் யாதவ் கூறுகையில், ''சாவந்த், தான் வேலைபார்த்து வந்த மருத்துவமனையில் பெண் செவிலியர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறார். இதற்கு இடையூறாக இருக்கும் தனது மனைவி பிரியங்காவை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த சாவந்த், மருத்துவமனையில் இருந்து குறிப்பிட்ட சில மருந்துகள் மற்றும் ஊசிகளை எடுத்துவந்து மனைவியின் உடலில் செலுத்தி உள்ளார். இதில் பிரியங்கா உயிரிழந்து விட்டார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மனைவியை கொன்று துண்டு துண்டாய் வெட்டி வீசிய கணவர் - உ.பி.யில் நடந்த கொடூரம்