இந்தியா

கார் வெடிகுண்டு தாக்குதல் - இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல்?

கார் வெடிகுண்டு தாக்குதல் - இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல்?

webteam

காஷ்மீரில் கார் குண்டு மூலம் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், பாதுகாப்பு படையினருக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை துணை ராணுவப்படை பேருந்துகள் மீது மோதி நடத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதிகள் இதற்கு ‌முன் பல வடிவங்களில் தாக்குதல் நடத்தியிருந்தாலும் கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை ஆகும். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் மட்டுமே நடத்‌‌தப்பட்டு வந்த இந்த கார் வெடிகுண்டுத் தாக்குதல், தற்போது இந்தியாவிலும் நுழைந்துள்ளது புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 

காரில் வெடிபொருள் நிரப்பி நடத்தப்படும் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டுபிடித்து தடுத்து நிறுத்துவது மிகவும் சிரமம் எனக் கூறப்படுகிறது.‌ குண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு கார் விரைந்து வரும்போது அதை தடுக்க மிகமிக குறைவான காலஅவகாசமே இருக்கும் என ‌பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். எனினும், காருக்குள் குண்டு பொருத்தி எதி‌ரிலிருக்கும் ஒரு பொருள் மீது லேசாக மோதினாலே வெடிக்கச் செய்து பலத்த சேத‌த்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பம் மிகக் கடினமானது என்றும் அது தெரிந்தவர்கள்‌ மிகச்சிலரே என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கார் வெடிகு‌ண்டு பொருத்தும் ‌நிபுணர்களைக் கண்டறியும் பணியைப் பாதுகாப்பு படையினர் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கார் வெடிகுண்டுத் தாக்குத‌ல்களை அதிகளவில் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது.