இந்தியா

பயங்கரவாதி அப்துல் ரஷீத் காஸி சுட்டுக் கொலை

பயங்கரவாதி அப்துல் ரஷீத் காஸி சுட்டுக் கொலை

webteam

காஷ்மீரின் புல்வாமாவில் கொலை வெறித் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி அப்துல் ரஷீத் காஸியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். 

பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் ரஷீத் காஸியை பயங்கரவாதிகளை உற்பத்தி செய்து தள்ளும் இயந்திரம் என்றே கூற முடியும். 18 முதல் 23 வயதுள்ள இளைஞர்களை தேடிப்பிடித்து அவர்களை மூளைச்சலவை செய்து, மதவெறியை ஊட்டி, தாக்குதல் நுட்பங்களை சொல்லித் தந்து, காஷ்மீருக்கு அனுப்புவதே இவரது தலையாய பணியாக இருந்தது. கைபர் பக்துன்கவா பகுதியில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கொண்ட நேட்டோ படைக்கு எதிராக போர் புரிந்த அனுபவம் பெற்ற காஸி, பின்னர் 2011ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பக்கம் பார்வையைத் திருப்பினார்.

ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் வலதுகரமாக மாறிய ரஷீத், அந்த அமைப்பு நடத்தும் பயிற்சி மையங்களில் தலைமைப் பயிற்சியாளரானார். எப்படியெல்லாம் வெடிகுண்டு தயாரிக்க வேண்டும். எப்படியெல்லாம் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த வேண்டும் எனச் சொல்லித் தந்து மாணவர்களை கூர்தீட்டி காஷ்மீருக்கு அனுப்பினார்.

இதற்கிடையில் காஷ்மீரில் கடந்தாண்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தங்கள் வேட்டையை வேகப்படுத்தினர். இதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முக்கிய தளபதிகள் உட்பட 230 பேர் கொல்லப்பட்டனர். 
இதில் மசூத் அசாரின் உறவினர்கள் உஸ்மான் மற்றும் தல்ஹா ரஷீத் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.  

இந்நிலையில் இவை அனைத்துக்கும் மிகப்பெரிய அளவில் பதிலடி தர திட்டமிட்ட மசூத் அசார், தனது நம்பிக்கைக்குரிய தளபதியான ரஷீத் காஸியை கடந்த டிசம்பர் மாதம் காஷ்மீருக்கு அனுப்பினார். அப்போது அடில் அகமது தர்ரை தனது நாசவேலைக்கான கருவியாகத் தேர்வு செய்த காஸி, தற்கொலைப் படைத் தாக்குதலை அவர் மூலம் கடந்த 14ம் தேதி அரங்கேற்றினார்.

இந்நிலையில், இந்தியப் படைகளின் தாக்குதலுக்கு இப்போது காஸி பலியாகியுள்ளார். ஆனால், தற்போது கொல்லப்பட்டது காஸி அல்ல. ஏனெனில் காஸியை பாகிஸ்தான் படைகள் 12 ஆண்டுகளுக்கு முன்பே கொன்று விட்டன என அந்நாட்டு ஊடகங்கள் திசை திருப்பும் நோக்கில் தெரிவித்துள்ளன.