இந்தியா

பயங்கரவாதிகளின் சடலங்களை கண்முன்னே காட்டுங்கள் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரரின் தாய்

Rasus

விமானப் படை தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் சடலங்களை கண்முன்னே காட்டாத வரையில், விமானப் படை தாக்குதலை நம்பப் போவதில்லை என புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை  பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது. ஆனால் இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விவரம் குறித்து வெளியுறவு செயலர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேமசயம் விமானப் படையினரின் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே விமானப் படையினரின் தாக்குதலில் 350 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது. இதனையடுத்து 350 பயங்கரவாதிகளை விமானப் படையினர் கொன்றதற்கான ஆதாரம் என்ன என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியது. இதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார். அதேசமயம், விமானப் படை தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இதுகுறித்து பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன், விமானப் படை தாக்குதலில் பயங்ரவாதிகள் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதில் வெளியுறவு செயலரின் அறிக்கையே அரசின் நிலைப்பாடு என தெரிவித்தார்.

இந்நிலையில் விமானப் படை தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் சடலங்களை கண்முன்னே காட்டாத வரையில் விமானப் படை தாக்குதலை நம்பப் போவதில்லை என புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களில் ஒருவர் ராம் வக்கீல். இவரின் 80 வயது தாய் இதுகுறித்து கூறும்போது, கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் உடலை காட்டாத வரையில் விமானப் படை தாக்குதல் குறித்து எப்படி நம்ப முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ராம் வக்கீலின் சகோதரி கூறும்போது, “ புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை நாங்கள் எங்கள் இரு கண்களால் பார்த்தோம். அதேபோல பாலகோட் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களை அரசு காட்ட வேண்டும். பயங்கரவாதிகளின் உடல்களை காட்டாத வரையில் எதையுமே நம்ப முடியாது. தாக்குதலில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என பாகிஸ்தான் கூறுகிறது. எனவே அரசு விமானப் படை தாக்குதல் தொடர்பான ஆதாரங்களையும் வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.