மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பூஜா கேட்கர், காரில் சைரன் பொருத்தியது, கூடுதல் ஆட்சியரின் அறையைப் பயன்படுத்தியது என தனது அதிகாரத்துக்கு மீறிய சில நடைமுறைகளைச் செய்துகொண்டதாகவும், போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ்களைச் சமர்ப்பித்தது, சாதி இடஒதுக்கீட்டிலும் வருமானத்தை குறைத்து காட்டி அதற்கான சலுகைகளைப் பெற்றதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து அவர், வேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையில், அதை மாநில அரசு நிறுத்திவைத்தது. இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசின் கூடுதல் செயலாளர் மனோஜ்குமார் திவேதி தலைமையில் ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய விசாரணையில் பூஜா கேட்கர் தனது பெயர், தந்தை பெயர், தாய் பெயர், புகைப்படம், கையெழுத்து, இமெயில் ஐடி, செல்போன் எண், முகவரி ஆகியவற்றை மாற்றி அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், அவர்மீது போலீசில் மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளது. அதோடு அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.
இதையும் படிக்க: கையில் முத்தமிடாத சிறுவனை கன்னத்தில் அறைந்தாரா? சர்ச்சையில் சிக்கிய துருக்கி அதிபர்!
இதற்கிடையே, தன்னை துன்புறுத்தியதாக புனே மாவட்ட ஆட்சித் தலைவர் மீது பூஜா புகார் கொடுத்திருந்தார். அதன்மீது வாக்குமூலம் வாங்க பூஜாவை போலீஸார் தொடர்புகொள்ள முயன்றனர். அவரது செல்போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் அகமத் நகரில் உள்ள அவரது வீட்டிலும் அவர் இல்லாததாலும் பூஜாவை தொடர்புகொள்ள முடியவில்லை.
மேலும், பூஜா கொடுத்திருந்த மாற்றுத்திறனாளி சான்று குறித்து விசாரணை நடத்தும்படி புனே மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அடுத்து, பூஜாவிடம் 23-ஆம் (கடந்த ஜூலை) தேதிக்குள் முசோரி ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் சேரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் அவர் 23-ஆம் தேதி அங்கு செல்லவில்லை. இதையடுத்து, பூஜாவின் ஐ.ஏ.எஸ் தேர்வை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு யு.பி.எஸ்.சி போர்டு பூஜாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கும் அவரிடமிருந்து பதில் இல்லை.
இந்த நிலையில்தான் அவரின் தேர்ச்சியை, யுபிஎஸ்சி ரத்து செய்துள்ளது. வருங்காலத்தில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மோசடி வழக்கு தொடர்பாக பூஜா கேட்கர் முன் ஜாமீன் கோரி டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே பூஜா கேட்கரின் தாய் மனோரமா கேட்கர் நிலப் பிரச்சினையில் விவசாயியை துப்பாக்கியால் மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இதேபோல அவரது தந்தை திலீப் கேட்கர் அரசு அதிகாரியாக இருந்தபோது 2 முறை லஞ்ச வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.