இந்தியா

பொள்ளாச்சி கொடூரம் : போராட்டத்தில் ஈடுபட்ட மாணவரை கன்னத்தில் அறைந்த எஸ்.பி

பொள்ளாச்சி கொடூரம் : போராட்டத்தில் ஈடுபட்ட மாணவரை கன்னத்தில் அறைந்த எஸ்.பி

webteam

புதுக்கோட்டையில் பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது, மாணவரை மாவட்ட எஸ்பி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பொள்ளாச்சியில் பெண்களை அடித்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை ஆபாச வீடியோவாக பதிவு செய்து ஒரு கும்பல் மிரட்டிய சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில கல்லூரிகள் விடுமுறையை அறிவித்துள்ளன.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து புதுக்கோட்டை அரசு கலைக்கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். 

ஆனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு செல்ல மறுப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாணவர் அமைப்பை சேர்ந்த அரவிந்த் சாமி என்பவரை எஸ்பி செல்வராஜ் கன்னத்தில் அறைந்து கலைந்து செல்லுமாறு கூறினார். இதையடுத்து எஸ்பியின் செயலை கண்டித்தும் மாணவ மாணவிகள் போராட்டத்தை வலுப்படுத்தினர். இதனால் மாணவர்கள் அமைப்பை சேர்ந்த 5 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியும் மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

தாக்கப்பட்ட மாணவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மாவட்ட எஸ்பியின் செயலை கண்டித்து நாளை அனைத்து இந்திய இளைஞர் சங்கம் மற்றும் மாணவர்கள் சங்கம் இணைந்து மாவட்ட எஸ்பி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, மாணவிகள் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டத்தை கைவிட முன்வந்ததாகவும் ஆனால் மாணவர் அமைப்புகள் அவர்களை போராட்டத்திற்கு தூண்டிவிடுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அரசு கலைக்கல்லூரி மாணவிகள் கூறுகையில் தங்களை யாரும் தூண்டிவிடவில்லை எனவும் பொள்ளாச்சி பாலியலை கண்டித்து தன்னிச்சையாக முடிவெடுத்து போராடி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.