புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி  File Image
இந்தியா

புதுச்சேரியில் ஜனவரி மாத இறுதியில் "உலகத் தமிழ் மாநாடு" நடைபெறும் - முதல்வர் ரங்கசாமி உறுதி!

புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற ஜனவரி மாத இறுதியில் உலகத் தமிழ் மாநாடு நடைபெறும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

PT WEB

பழங்கால துறைமுகங்களில் ஒன்றான புதுச்சேரியில் அரிக்கம் மேடு துறைமுகத்தில் வெளிநாட்டு வாணிபம் கி.மு 200 முதல் கி.பி 200 வரை புகழ் பெற்ற வணிகத்தளமாக விளங்கியது என அரிக்கமேட்டு அகழாய்வின் மூலம் தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள். தமிழர்களின் பாரம்பரிய வாணிபத்தை பறைசாற்றும் களமாகப் புதுச்சேரி இருந்துள்ளது. இப்படிப் பல பெருமைகளைக் கொண்ட புதுச்சேரியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும் என முதல் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து புதுச்சேரியில் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இந்தநிலையில் புதுச்சேரி அரசின் கலை, பண்பாட்டுத் துறை சார்பில் புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் காமராஜர் மணிமண்டபத்தில் இன்று முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, அரசுச் செயலர் நெடுஞ்செழியன், புதுவைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாட்டினை எப்போது எந்த இடத்தில் நடத்துவது என்பது குறித்தும், மாநாட்டில் இடம் பெற வேண்டிய நிகழ்வுகள் மற்றும் அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாநாட்டில் தமிழ் மொழி, இலக்கியம், தமிழர் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம், ஆகிவை குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாநாட்டில் இந்தியாவிலிருந்து மட்டுமின்றி ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், அகழ்வாராய்ச்சி நிபுணர்கள், பங்கேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநாட்டின் தமிழின் தொன்மை, தமிழில் பண்பாடு, தமிழ் இலக்கியம், தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல், சமூகவியல், மொழியியல், மொழிபெயர்ப்பில் என பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாற்ற அழைப்பது மாநாட்டினை சிறப்பாக நடத்துவது, விழாவிற்கான குழுக்களை அமைப்பது மற்றும் மாநாட்டு ஏற்பாடுகளை விரிவாக மேற்கொள்வது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதேபோல் மாநாட்டை வரும் ஜனவரி மாத இறுதியில் நடத்தலாம் எனத் தமிழறிஞர்கள் கருத்து தெரிவித்தனர். மாநாடு நடத்துவதற்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்கிக் கொடுக்கும் என முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்தார்.