Death File Photo
இந்தியா

புதுச்சேரி: வாய்க்காலை தூர்வாரிய போது இடிந்து விழுந்த மதில் சுவர் - 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

புதுச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும் போது மதில் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

webteam

செய்தியாளர்: ரகுமான்

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முதலியார் பேட்டை தொகுதிக்குட்பட்ட ராமானுஜம் நகர் முதல் வசந்த நகர் வழியாக தேங்காய்திட்டு பிரதான வாய்க்கால் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் திருவண்ணாமலை பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 16 ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

Wall collapses

இந்நிலையில், இன்று காலை வாய்க்கால் சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக வாய்க்காலை ஒட்டி இருந்த 7 அடி உயர மதில் சுவர் சரிந்து விழுந்தது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குக் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் 6 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், பாக்கியராஜ் (48) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாலமுருகன் (33) மற்றும் அந்தோனி (65) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

வாய்க்காலில் இருந்து தூர்வாரிய மண்னை மதில் சுவரை ஒட்டிக் கொட்டியதால் பாரம் தாங்காமல் மதில் சுவர் இடிந்து விழுந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள முதலியார்பேட்டை போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.