புதுச்சேரியில் மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இதனை கண்டித்து பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
மின் துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக, புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. போதிய ஆட்கள் இல்லாததால் மின் தடையை சரி செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால் இருளில் மூழ்கி இன்னலுக்கு ஆளான மக்கள், அரசு பேருந்துகளை சிறைப்பிடித்தும், மின்சார அலுவலகங்களை முற்றுகையிட்டும், சாலைகளில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சென்ற காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்லச் செய்தனர். அதே வேளையில், அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் மின்வாரிய ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.