இந்தியா

மாணவர் சேர்க்கை முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு கிரண் பேடி உத்தரவு

மாணவர் சேர்க்கை முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு கிரண் பேடி உத்தரவு

webteam

புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார்.

முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு தரப்பிலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வாட்ஸ்அப் மூலம் பதிலளித்துள்ள கிரண் பேடி சுதந்திரமான உடனடி விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்கொணரமுடியும் என தெரிவித்துள்ளார். அரசியல், நிர்வாக மற்றும் மேலாண்மையின் ஒட்டுமொத்த தோல்விதான் இந்த முறைகேடுகளுக்கு காரணம் என கூறியுள்ள கிரண் பேடி, பெற்றோரும், தகுதிவாய்ந்த மாணவர்களும் இதில் பலிகடாக்களாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள கிரண் பேடி அவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சில முக்கியமான ஆவணங்கள் சிபிஐக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டதாகவும் கிரண் பேடி கூறினார். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் மாணவர்களை சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கல்லூரிகள் அதைச் செய்யாமல் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக கிரண் பேடி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக பதவியேற்றது முதலே கிரண் பேடி ஆளும் காங்கிரஸ் அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.