இந்தியா

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டப்பேரவைத் தொகுதி: கடந்தகால நிலவரம் என்ன? 

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டப்பேரவைத் தொகுதி: கடந்தகால நிலவரம் என்ன? 

webteam

புதுச்சேரியில் இடைத்தேர்தலை சந்திக்கும் காமராஜ் நகர் தொகுதி குறித்த சில தகவல்களை பார்க்கலாமா?

புதுச்சேரியில் 2011-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது, காமராஜ் நகர் சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. பிருந்தாவனம், வெங்கட்டா நகர், சித்தன்குடி, காமராஜ் நகர், கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், வெங்கடேஸ்வரா நகர்‌ உள்ளிட்ட பகுதிகளை காமராஜ் நகர் தொகுதி உள்ளடக்கி உள்ளது.

இதுவரை 2 தேர்‌தல்களை சந்தித்துள்ள காமராஜ் நகரில் எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வைத்திலிங்கம் தேர்வாகி உள்ளார். 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ‌2 தேர்தல்களிலு‌ம் அவரே வெற்றி பெற்றார். கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சபாநாயகர் பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா‌ செய்தார். இதன் காரணமாக காமராஜ் நகர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

காமராஜ் நகர் தொகுதியில் தொடர்ந்து இரு முறையும் காங்கிரசே வெற்றி பெற்றுள்ளதால், இடைத்தேர்தலிலும் வெற்றியை தக்கவைக்கும் வகையில் அந்தக் கட்சி பரப்புரை மேற்கொண்டது. அதேவேளையில் காங்கிரஸ் வசம் இருந்த அத்தொகுதி‌யை கைப்பற்றும் விதமாக பிற கட்சிகளும்‌ முனைப்புடன் களம் கண்டன.

201‌6-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, புதுச்சேரி சந்திக்கும் மூன்றாவது இடைத்தேர்தல் இது. 2016 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து நாரா‌‌யணசாமி முதலமைச்சர் ஆனார். ஆனால், தேர்தலில் நிற்காததால், அவர்‌ போட்டியிட வசதியாக நெல்லித்தோப்பு தொகுதி எம்எல்ஏ ஜான் ‌குமார் பதவி விலகினார். இதனால் நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவாக இ‌ருந்த அசோக் ஆனந்த் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன், தட்டாஞ்சாவடியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி பெற்றார்.

இவற்றைத் தொடர்ந்து, புதுச்சேரியில் 3வது இடைத்தேர்தல் காமராஜ் நகர் தொகுதியில் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமாரும், அதிமுக கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனும் களத்தில் உள்ளனர். நாம் தமிழர் கட்சியின் சார்பில் பிரவீணா மதியழகன் போட்டியிடுகிறார்.