புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆரம்பப்பள்ளி முதல் 8 ஆம் வகுப்பு வரை நாளை முதல் வரும் 26ந் தேதி விடுமுறையை அறிவித்தார் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 15 தினங்களுக்கு மேலாக வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் அனைத்து அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். இதனிடையே இன்று சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில் புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் (மார்ச் 16) வரும் 26ஆம் தேதி வரை புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆரம்ப வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு 'புதிய தலைமுறை'க்கு அளித்த பேட்டியில், புதுச்சேரியில் H3N2 இன்புளூயன்சா காய்ச்சல் காரணமாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 6 குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்றும் குழந்தைகள் மூலம் இந்த தொற்று நோய் பரவும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பொது இடங்களுக்கு செல்வோர் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஸ்ரீரமலு வலியுறுத்தினார்.