முதலமைச்சர் நாராயணசாமியின் பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகளை ஏற்க இயலாது என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அரசு நிர்வாகத்திற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி ஆளுநர் மாளிகை அருகே முதலமைச்சர் நாராயணசாமி கறுப்பு சட்டை அணிந்து கடந்த 13-ஆம் தேதி தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அதேசமயம் நாராயணசாமி போராட்டத்தை தொடங்கிய மறுநாள் துணை ஆளுநரான கிரண்பேடி புதுச்சேரியிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
ஆனால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தர்ணா போராட்டம் தொடரும் எனக் கூறி, தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் தர்ணா போராட்டத்தை நடத்தி வருகிறார் நாராயணசாமி. அவருடன் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நாராயணசாமி போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதனிடையே டெல்லி சென்ற ஆளுநர் கிரண்பேடி இன்று மாலை புதுச்சேரி திரும்பினார். இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். பேச்சுவார்த்தையில் தலைமை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருக்க வேண்டும் என அவர் நிபந்தனை விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகளை ஏற்க இயலாது என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பேச்சுவார்த்தைக்கு தானே அழைத்ததால் நிபந்தனைகளை ஏற்க முடியாது எனவும் பேச்சுவார்த்தைக்கான இடம், நேரம், பங்கேற்கும் அதிகாரிகள் குறித்த தகவலை ஆளுநர் செயலகத்திற்கு அனுப்பி வைத்தால் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் தர்ணா போராட்டம் தொடரும் நிலை உள்ளது.