இந்தியா

தமிழகத்தின் வழியாக புதுச்சேரி பேருந்துகள் இயக்கம்...!

webteam

புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் இரு மாவட்டங்களை தாண்டி காரைக்காலுக்கு புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சமூக இடைவெளியுடன் பயணிகள் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நான்காவது முறையாக பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்ட நிலையில் பல்வேறு தளர்வுகளை புதுச்சேரி அரசு விதித்தது. அதில் புதுச்சேரிக்குள் பேருந்துகளை இயக்குவது என அறிவிக்கப்பட்டு நேற்று முதல் உள்ளூர் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியான காரைக்கால் மாவட்டத்திற்கும் பேருந்துகள் விட வேண்டும் என்று புதுச்சேரி அரசு முடிவெடுத்தது. புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி என கடலூர் மற்றும் நாகை மாவட்டங்கள் வழியாக காரைக்காலுக்கு பேருந்துகள் செல்ல வேண்டும் என்பதால் இரு மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி கோரப்பட்டது. தமிழக பகுதிகளில் பயணிகளை ஏற்றவோ இறக்கவோ கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி பெறப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரி அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது.

பேருந்தில் ஏறும் பயணிகள் முகக்கவசம் அணிந்து, கைகளில் கிருமிநாசிகள் தெளிக்கப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டார்கள். சமூக இடைவெளியுடன் 32 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். பேருந்து புறப்படுவதற்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாறன், பயணிகளிடம் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் வழிகாட்டுதலுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தமிழக பகுதிகளில் இறங்கக்கூடாது எனவும் அறிவுறுத்தினார். பயணிகளின் வரத்தை அனுசரித்து கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்து கழக நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.