புதுச்சேரி மாநில பாஜக மகளிர் அணி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாண சுந்தரம், வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், ”புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்ததற்கு மகளிர் அணியின் உழைப்பு முக்கிய காரணம். புதுச்சேரியில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது, இதை யாரும் மறுக்கக் முடியாது. 2024-ல் புதுச்சேரியில் பிரதமரின் கையோங்கி எம்பி சீட்டை நமக்கு ஒதுக்க சபதமேற்க வேண்டும்.
2026ல் புதுச்சேரியில் பாஜக தனித்து ஆட்சி அமையும். அதில், மாற்றுக்கருத்து கிடையாது. என்ஆர் காங்கிரசில் 10 எம்எல்ஏக்களும், பாஜகவில் 6 எம்எல்ஏக்களும் உள்ளோம். மக்களுக்கு பணியாற்றுகின்ற முக்கிய இலாகாக்கள் நம்மிடம் கிடையாது. மக்களுக்கு பணியாற்றுகின்ற சமூக நலம், உள்ளாட்சி, பொதுப்பணித்துறை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளை விட்டுக் கொடுக்கும் நிலைமையாகி விட்டது.
இதனால் கட்சிக் காரர்களுக்கும், தொகுதி மக்களுக்கும் எந்த உதவியும் செய்ய முடியவில்லை. எங்களுடைய கைகள் கட்டப்பட்டுள்ளது. இதையெல்லாம் மாற்றுவதற்கு நாம் இன்னும் கடுமையாக உழைத்து பாஜக ஆட்சியை கொண்டுவர வேண்டும். எப்படி நாட்டை ஆள்வது பாஜக என்று உறுதி செய்யப்பட்டுள்ளதோ, அதேபோல் புதுச்சேரியில் பாஜக தனித்து ஆட்சிக்கு வர வேண்டும்.
இங்கு கூட்டணி அரசு வந்ததால் நம்மால் எதுவும் செய்ய முடியாது. புதுச்சேரி பல ஆண்டுகளாக காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. அதன் பிறகு, என்ஆர் காங்கிரஸ் உருவானது. அதிலிருந்து நாங்கள் பிரிந்து, இந்த நாட்டை ஆளுகின்ற சக்தி பாஜகவுக்கு தான் இருக்கிறது என்று ஒன்று சேர்ந்துள்ளோம்” என்று பேசினார். அவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.