இந்தியா

சிஏஏவுக்கு எதிராகப் புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

சிஏஏவுக்கு எதிராகப் புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

webteam

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. இந்தக்கூட்டத்தில் சிஏஏவுக்கு எதிரான தீர்மானம் உள்ளிட்ட 4 தீர்மானங்களை முதலமைச்சர் நாராயணசாமி பேரவையில் முன்மொழிந்தார். குறிப்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை முதலமைச்சர் நாராயணசாமி பேரவையில் முன்மொழிந்த போது பாஜக உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்த அவர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை, பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்த நிலையில் காங்கிரஸ், திமுக, சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்திற்கு பின்னர் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அரசை டிஸ்மிஸ் செய்தாலும் அதனை எதிர்க்க அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஏற்கெனவே கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், 6 ஆவதாக புதுச்சேரியிலும் தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.