இந்தியா

”புதுச்சேரியில் அரசின் திட்டங்களை பெற ஆதார் கட்டாயம்” - துணைநிலை ஆளுநர் தமிழிசை

”புதுச்சேரியில் அரசின் திட்டங்களை பெற ஆதார் கட்டாயம்” - துணைநிலை ஆளுநர் தமிழிசை

webteam

புதுச்சேரி மாநிலத்தில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசையின் உத்தரவுப்படி சமூகநலத் துறை சார்பாக  அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவுப்படி சமூகநலத்துறை செயலர் உதயக்குமார் அனைத்து துறை செயலர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அரசின் சேவைகள், பலன்கள் அல்லது மானியங்களை வழங்குவதற்கான அடையாள ஆவணமாக ஆதாரை பயன்படுத்துவது அரசாங்க விநியோக செயல்முறைகளை எளிதாக்குகிறது.

வெளிப்படைத் தன்மை மற்றும் செயல்திறனைக் கொண்டு வருகிறது. மேலும் பயனாளிகள் தங்கள் உரிமைகளை வசதியாகவும் தடையின்றி நேரடியாக பெற முடிகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சமூகநலத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 13 முக்கியத் திட்டங்களான, மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இடையேயான திருமணத்திற்கான ஊக்கத் தொகை வழங்குதல், மாற்றுத் திறனாளிகள் (இருவரும்) திருமணத்திற்கு ஊக்கத்தொகை வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கு சொந்த வாகனங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குதல், மோட்டார் வாகனங்கள் வாங்க மாற்றுத் திறனாளிகளுக்கு நிதி உதவி வழங்குதல், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல்,

மற்றம் கண் தானம் செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை, மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான மாநில விருது, பெருந்தலைவர் காமராஜ் திட்டத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளின் இறுதிச் சடங்குகளுக்கு நிதியுதவி, மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டிகள் வழங்கல், மாற்றுத் திறனாளிகளுக்கு போக்குவரத்து உதவித் தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெறுவோருக்கு, இனி ஆதார் எண் கட்டாயம் தேவை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.

இத்திட்டங்கள் புதுச்சேரி நிதி மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த நிதியில் செயல்படுகிறது என்பதால் இத்திட்டங்களில் பலன் பெறுவோர், திட்டங்களை பெற தகுதியுடையோர், ஆதார் எண் ஆதாரத்தை அளிப்பது அவசியம் எனவும் திட்டங்களில் பலன் கிடைக்க ஆதார் இல்லாதோர் முன்னதாக விண்ணப்பித்து பெறுவது அவசியம் என்றும் இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.