மோடி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ட்விட்டர்
இந்தியா

இலவச பேருந்து பயணத் திட்டம்| பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு தமிழக அமைச்சர் பதிலடி!

Prakash J

தமிழகத்தில், திமுக ஆட்சியில் அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தெலங்கானாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மகாலக்‌ஷ்மி திட்டத்தின்கீழ் மாநிலத்தில் அரசால் இயக்கப்படும் ஏசி அல்லாத பேருந்துகளில் பெண்களும் திருநங்கைகளும் இலவசமாக பயணிக்க முடியும். இந்த நிலையில், ஹைதராபாத்தில் 2026-க்கு பிறகு நடைபெறவுள்ள மெட்ரோ திட்டப் பணிகளில் இருந்து எல்&டி நிறுவனம் விலகுவதாக அதன் இயக்குநர் ஷங்கர் ராமன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்த பேட்டியில், “தெலங்கானாவில் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்குவதால், மெட்ரோ பயணங்களின் மீதான சுவாரஸ்யம் குறைந்துவிட்டது. பெண்கள் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துவது குறைந்துவிட்டது. இலவச பேருந்துகளில் அதிக எண்ணிக்கையில் செல்கிறார்கள். ஆனால் ஆண்கள், பயணத்திற்கு சராசரியாக 35 ரூபாய் செலுத்துகிறார்கள். அதேவேளையில், பேருந்துகளின் எண்ணிக்கை மற்றும் தரம் உயர்த்தப்படவில்லை. தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் மாநிலத்தின் நிதிநிலைக்கு சாதகமாக அமைவது இல்லை. இந்த விவகாரத்தில் எந்த வேடிக்கையும் இருக்கக் கூடாது. நவீன, பூஜ்ஜிய மாசுபடுத்தாத போக்குவரத்து அமைப்பை உருவாக்க தனியார் முதலீடு பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், அதே நேரத்தில், மாசுபடுத்தும் பேருந்துகளை மக்கள் பயன்படுத்துவதற்கு மாநில அரசு பணம் செலவழிக்கிறது. இது மாநில போக்குவரத்து கழகத்தை திவாலாக்கும் நடவடிக்கை. இலவசப் பேருந்து உயர்வு திட்டம் பொதுப் போக்குவரத்தில் பாலினப் பாகுபாட்டிற்கு வழிவகுக்கிறது. ஹைதராபாத் மெட்ரோவில் தற்போது தினமும் சுமார் 4.8 லட்சம் பேர் மெட்ரோவை பயன்படுத்துகின்றனர். இந்த திட்டத்தால் ஏற்பட்ட பெரும் சுமையை குறைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ள அவர், ஹைதராபாத்தில் 2026-க்கு பிறகு நடைபெறவுள்ள மெட்ரோ திட்டப் பணிகளில் இருந்து எல்&டி நிறுவனம் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: CSK VS RCB| போட்டியைக் காண டிக்கெட் புக்கிங்.. ரூ.3 லட்சத்தை இழந்த இளைஞர்.. போலீஸ் விசாரணை!

இதற்குப் பதிலளித்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ”மாநில அரசின் இலவசப் பேருந்து பயணத் திட்டத்தால், ஹைதராபாத் மெட்ரோ திட்டத்தில் இருந்து எல்&டி வெளியேற ஆர்வமாக இருந்தால், அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான எமது அரசின் இலவசப் பேருந்துத் திட்டம் தொடரும். எல்&டி விலகினால் அதை இயக்க ஆர்வமாக இருக்கும் மற்றொரு நிறுவனத்தைத் தனது அரசாங்கம் தேடும். இதில் கவலைப்பட ஒன்றுமில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி ஊடகம் ஒன்றுக்கு இதுதொடர்பாகக் கருத்து தெரிவித்திருந்தார். அதில், ”தேர்தலில் வெற்றிபெறுவதற்காகச் சில கட்சிகள் பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணத் திட்டத்தை வழங்குகின்றன. இதனால் மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50% சதவிகிதம் குறைந்துவிட்டன. இந்தத் திட்டத்தால் பேருந்துகளில் அதிக நெரிசல் ஏற்படுவதோடு, சுற்றுப்புறச் சூழலும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது” எனக் கூறியிருந்தார்.

இதையும் படிக்க: ”தோனிக்கான விசில் சத்தம் என் காதுகளையே வலிக்க செய்தது” - நேரில் பார்த்த ஆஸி. வீராங்கனை உருக்கம்!

இதற்கு நாடு முழுவதும் எதிர்வினைகள் கிளம்பின. குறிப்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ”மகளிர் இலவசப் பேருந்துத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் நினைக்கிறார்” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர், “உலகில் எங்காவது பேருந்துச் சேவை இல்லாமல் மெட்ரோ ரயில் சேவை மட்டும் இருப்பதை காட்ட முடியுமா? பேருந்துச் சேவையால் மெட்ரோ சேவையைப் பாதிப்பதை நிரூபிக்க முடியுமா?, சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பல ஆண்டுகளாக மத்திய அரசு நிதி தராமல் நிறுத்தி வைத்திருப்பது ஏன்” எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க; 9 வயது மகளை கொடூரமாக தாக்கிய தாய்| வீடியோ எடுத்த தந்தை.. போலீஸில் புகார்! #Viralvideo