பூஜா கேட்கர் எக்ஸ் தளம்
இந்தியா

”நான் குற்றவாளி அல்ல; உண்மை வெளிவரும்” - குற்றச்சாட்டிற்கு பதிலளித்த புனே பயிற்சி பெண் IAS அதிகாரி!

Prakash J

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பூஜா கேட்கர், காரில் சைரன் பொருத்தியது, கூடுதல் ஆட்சியரின் அறையைப் பயன்படுத்தியது என தனது அதிகாரத்துக்கு மீறிய சில நடைமுறைகளைச் செய்துகொண்டதாகவும், போலி மாற்றுத் திறனாளி சான்றிதழ்களைச் சமர்ப்பித்தது, சாதி இடஒதுக்கீட்டிலும் வருமானத்தை குறைத்து காட்டி அதற்கான சலுகைகளைப் பெற்றதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவர், தற்போது வேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் பற்றிய விவரங்களைச் சேகரித்து மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்திவருகின்றன.

விசாரணையில், அவர் செய்தது தவறு என கண்டறியப்பட்டால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பயன்படுத்தி வந்த கார் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பூஜா கேட்கரின் தாய் மனோரமா கேட்கர், விவசாயி ஒருவரின் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றபோது அவ்விவசாயியை துப்பாக்கி காட்டி மிரட்டியதாக சர்ச்சையில் சிக்கினார். இந்த வழக்கில் பூஜாவின் பெற்றோர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைப் பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: IAS போலிச் சான்றிதழ் விவகாரம்| புனே பெண் அதிகாரியைத் தொடர்ந்து மேலும் பலர் மீது குவியும் புகார்கள்!

இந்த நிலையில், "என்னை குற்றவாளி என்று நிரூபித்த ஊடக விசாரணை தவறானது" என பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நமது இந்திய அரசியல் சாசனம் குற்றவாளி என்று கூறும்வரை, அதுவரை எல்லோரும் நிரபராதி என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, என்னை குற்றவாளி என்று கூறுவது உண்மையில் தவறானது. இது அனைவரின் அடிப்படை உரிமை.

நீங்கள் கூறலாம், ஆனால் என்னை குற்றவாளி என்று நிரூபிப்பது தவறு. விசாரணைக் குழு முன் சாட்சியம் அளிப்பேன். குழுவின் முடிவை ஏற்றுக்கொள்வேன். எனது சமர்ப்பிப்பு எதுவாக இருந்தாலும், அதை நான் குழுவின் முன் கொடுப்பேன், உண்மை வெளிவரும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் முன்னதாக பேட்டியளித்திருந்த பூஜா கேட்கரின் தந்தை திலீப் கேட்கர், “என் மகள் எந்தத் தவறும் செய்யவில்லை. இதுகுறித்து விசாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. எனவே இறுதி முடிவுக்காக காத்திருப்போம். யாரோ வேண்டுமென்றே என் மகளை மாட்டிவிட முயற்சி செய்கிறார்கள்.

இதுகுறித்து விசாரணைக் குழுவின் முன் எங்களின் கருத்தை முன்வைப்போம். சட்டப்பூர்வ செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது. எது நடந்தாலும் எல்லாமே விதிப்படிதான் நடந்தது, எந்த தவறும் இல்லை” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வீரமரணம்அடைந்த கேப்டன்|கோரிக்கை வைத்த பெற்றோர்..மவுனம் காக்கும் மனைவி..பங்கு பிரிக்கப்பட்டது எப்படி?