இந்தியா

அக்னிபாத்: வன்முறையில் ஈடுபட்டால் நன்னடத்தை சான்று கிடைக்காது என எச்சரிக்கை

அக்னிபாத்: வன்முறையில் ஈடுபட்டால் நன்னடத்தை சான்று கிடைக்காது என எச்சரிக்கை

JustinDurai

''வன்முறையில் ஈடுபட்டால் காவல்துறையினரின் நன்னடத்தை சான்று கிடைக்காமல் போய்விடும்'' என எச்சரித்துள்ளார் இந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் விஆர் சவுத்ரி.

இந்திய ராணுவத்தில் அக்னிபாத் என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேரும் 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் எதிர்ப்பு வலுக்கிறது.

பீகார், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் ராணுவ வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்து உள்ளனர். அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. சில இடங்களில் ரயில் எரிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் அரங்கேறியுள்ளன.

இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடுவது பின்னடைவைத் தான் ஏற்படுத்தும் என இந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் விஆர் சவுத்ரி எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கும் போராட்ட வன்முறையை கண்டிக்கிறேன். வன்முறை என்பது எதற்கும் தீர்வாக அமையாது; பின்னடைவைத் தான் ஏற்படுத்தும். பாதுகாப்புத் துறையில் சேர விரும்புவோருக்கு காவல்துறையினரின் நன்னடத்தை சான்று அவசியம். வன்முறையில் ஈடுபட்டால் காவல்துறையினரின் நன்னடத்தை சான்று கிடைக்காமல் போய்விடும்'' என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாம்: ஆபத்தானதா 'அக்னிபாத்' திட்டம்?! - எச்சரிக்கும் முன்னாள் ராணுவத்தினர்