இந்தியா

பரேலியில் உள்ள முக்கிய சந்திப்புக்கு அபிநந்தன் பெயர்!

webteam

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள முக்கிய சந்திப்புக்கு விங் கமாண்டர் அபிநந்தன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள பரேலியின் முக்கிய பகுதியான டெலாபிர் சாலை, திருசூல் விமானப் படைத்தளத்துக்கு அருகில் இருக்கிறது. இந்தச் சாலையின் சந்திப்புக்கு விங் கமாண்டர் அபிநந்தன் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பாஜக கவுன்சிலர் விகாஸ் சர்மா, இந்த மாத தொடக்கத்தில் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்க கூட்டுறவு அமைப்பு, இதுபற்றி மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து இப்போது அந்த சாலைக்கு அபிநந்தன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இதுபற்றி பரேலி மாநகராட்சியின் துணைத் தலைவர் அதுல் கபூர் கூறும்போது, ‘’வியாழக்கிழமை நடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி டெலாபிர் சாலை, அபிநந்தன் சவுக் என்று அழைக்கப்படும். இந்தப் பெயரை சூட்டியிருப்பது பரேலியை சேர்ந்தவர்களுக்கு பெருமையான விஷயம். அதோடு, சவுகி சவுரஹா பகுதிக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி பெயரை சூட்டியுள்ளோம்’’ என்றார்.