டெல்லி பயிற்சி மையங்களில் மாணவர்கள் pt web
இந்தியா

தரமற்ற உணவு,மோசமான அறை: ஐ.ஏ.எஸ் கனவுடன் பயிற்சிக்காக டெல்லி செல்லும் மாணவர்கள் சந்திக்கும் அவலநிலை!

ஐ.ஏ.எஸ் கனவுடன் இருக்கும் மாணவர்கள், தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சிக்காக தலைநகர் டெல்லிக்கு படையெடுக்கக் காரணம் என்ன, அவர்களுக்கு போதிய வசதிகள் கிடைக்கின்றனவா என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

PT WEB

செய்தியாளர் ராஜீவ்

மாணவர்கள் சந்திக்கும் சவால்கள்

ஐ.ஏ.எஸ் கனவுடன் இருக்கும் மாணவர்கள், தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சிக்காக தலைநகர் டெல்லிக்கு படையெடுக்கக் காரணம் என்ன, அவர்களுக்கு போதிய வசதிகள் கிடைக்கின்றனவா என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து கள ஆய்வு செய்த போது, அதிர்ச்சியூட்டும் தகவல்கள்தான் விடையாகக் கிடைத்தன..

ஐ.ஏ.எஸ். அதிகாரியாகும் கனவுடன் இருப்பவர்கள், இந்த ஆசையை கருவாக்கி, சிறு வயதிலிருந்தே, மனதில் சுமந்து தவமிருக்கிறார்கள்... ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதி, வெற்றி கண்டு, மிஸோரியில் பயிற்சி பெற்று, மாவட்ட ஆட்சியராகவோ, ஐஏஎஸ் தகுதிக்கான இருக்கையிலோ அமரும்போது தான், அவர்கள் கேட்ட வரம் கைகூடுகிறது... இதற்காக அவர்கள் போடும் மூலதனமும் சந்திக்கும் துயரங்களும் ஏராளமாக உள்ளன...

இப்படியான ஐஏஎஸ் கனவுடன், தேர்வுப் பயிற்சி மையத்தில் சேர்ந்தவர்களில் 3 பேர், ஜலசமாதி ஆன துயரம் தலைநகர் டெல்லியில் நிகழ்ந்தது... லட்சக் கணக்கான ரூபாயை கட்டணமாக செலுத்திவிட்டு, எப்படியாவது சிவில் சர்வீஸ் தேர்வில் வெல்வோம் என்பது மட்டுமே இவர்களின் கனவு.

மாணவர்களை குறிவைத்து இயங்கும் வர்த்தகம்

இந்தக் கனவுடன், பல்வேறு மாநிலங்களில் இருந்து, தலைநகர் டெல்லியை நோக்கி படையெடுப்பவர்களின் எண்ணிக்கை மிக மிக பெரியது... இந்த மாணாக்கரைக் குறி வைத்தே, ஒரு வர்த்தக வட்டம் இயங்குகிறது... தங்கும் அறைகள், உணவகம் உள்ளிட்ட தேவைக்காக அணுகும் மாணாக்கரை, வருவாய்க்கான ஆதாரமாக மட்டுமே கருதுகிறது இந்த வர்த்தக வட்டம்.

ஒரு வழியாக, தங்கும் அறை கிடைத்து, அதில் வசிக்க பழகிவிட்டாலும், பசியாற்றுவதற்கான வாய்ப்புகள் உணவகங்கள் தான்... அன்பும் அக்கறையும் கலந்து, தாயின் கையால் பரிமாறிய உணவருந்தி பசியாறி பழகிய தங்களுக்கு, உணவகங்களில் கிடைப்பது என்னவோ தரமற்ற உணவு தான் என்கிறார்கள் பரிதாபத்துக்குரிய இந்த மாணவர்கள்.

ஒரே வகுப்பில் 600...

மாணவர்கள் இதுதொடர்பாக கூறுகையில், “உணவு உள்பட ஒவ்வொன்றுமே எங்களுக்குப் பிரச்னை தான். நாங்கள் தென் மாநிலங்களில் இருந்து வந்துள்ளோம். இங்கு தென்மாநில உணவு வழங்கும் ஹோட்டல்கள் இல்லை. 2 - 3 உணவகங்கள் உள்ளன. ஆனால், அவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. நான் ஒரு உணவகத்தைக் காட்டுகிறேன். அதைப் பாருங்கள். அந்த உணவகத்தில் எலிகள் ஓடித் திரிகின்றன. ஆனால், ஒரு சாப்பாட்டுக்கு ரூ.150 வசூலிக்கின்றனர். உணவு விஷயத்திலும் தங்கும் அறையிலும் நூலகத்திலும் பயிற்சி மையத்திலும் இதே நிலை தான். ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். ஒரு வகுப்பில் 600 பேர் வரை அமர வைத்து பயிற்சி அளிக்கின்றனர். 600 பேர் வரை ஒரு வகுப்பில் இருக்கும்போது கல்வித்தரம் எப்படி இருக்கும்..?” என தெரிவித்துள்ளார்.

கல்விக்காக டெல்லிக்கு வரும் மாணாக்கருக்கு அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்வதற்காகவே, மாநில அரசு நிதி ஒதுக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள் இந்த மாணவர்கள்.. ஆனால், அந்த நிதி எங்கே போனது என்ற கேள்வியையும் முன்வைக்கிறார்கள் இவர்கள்.