assam exam x page
இந்தியா

அதிர்ச்சி! பெண் தேர்வரின் அந்தரங்க உறுப்பில் சோதனை.. விசாரணைக்கு உத்தரவிட்ட அசாம் முதல்வர்!

Prakash J

அசாமில் முதல்வர் ஹிமாந்தா பிஷ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில், பல்வேறு துறைகளில் தரம் III பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான எழுத்துத் தேர்வு, கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது. 2,305 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை 11,23,204 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அப்போது மொபைல் மற்றும் வைஃபை ஆகிய இணையத்தின் சேவைகள் தடை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தேர்வு எழுத வந்த பெண் ஒருவர் தனது அந்தரங்க உறுப்புகளை பெண் போலீஸ் ஒருவர் சோதனை செய்ததாக கூறிய குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு முடிந்த பின்பு சமூக ஊடகங்களில் அப்பெண் இதுகுறித்து பகிர்ந்தபின்பு இந்த விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது. இதனையடுத்து தாங்களும் இதேபோன்ற சங்கடத்தை அனுபவித்ததாக வேறு சில பெண்களும் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் அசாம் மாநிலத்தில் பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஷ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார். அவர், உடனே விசாரணையை மேற்கொள்ளுமாறு காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஜி.பி.சிங்கிடம் கேட்டுக்கொண்டார். அதன்பேரில், மாவட்டத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்துமாறு பெண் டிஐஜி ஒருவருக்கு ஜி.பி.சிங் உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து ஹிமாந்தா பிஷ்வா சர்மா, "என்னைப் பொறுத்தவரை, எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கண்ணியம் மற்றும் மரியாதை மிகவும் முக்கியமானது. வடக்கு லக்கிம்பூரில் நடந்த மற்றொரு சம்பவத்தையும் டிஜிபி என்னிடம் தெரிவித்தார். அதேநாளில் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரின் உள்ளாடையில் இருந்து மோசடி செய்வதற்கான பொருட்கள் கிடைத்தன. அஸ்ஸாம் நேரடி ஆட்சேர்ப்பு தேர்வை (ADRE) மிக நேர்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தும் பணி அரசாங்கத்திற்கு உள்ளது. இதற்கு நாங்கள் முழு இளைய தலைமுறையினருக்கும் கடமைப்பட்டுள்ளோம், எந்த சூழ்நிலையிலும் இதை சமரசம் செய்ய முடியாது" என்று தெரிவித்தார்.