பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மைதான் என உயர்மட்டக்குழு விசாரணையில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி உள்ளிட்டோருக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாக கடந்த ஆண்டு சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக இருந்த ரூபா குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது என்றும், சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது குற்றம்சாட்டினார்.
அந்தப் பிரச்னை பெரும் புயலைக் கிளப்பியிருந்தது. இதுகுறித்து விசாரணைக்கு அப்போதைய கர்நாடக முதலவர் சித்தராமையா உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. ரூபா பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையே ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையிலான விசாரணைக்குழு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிக்கை சமர்பித்திருந்தது. அந்த அறிக்கையின் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில், சிறைச்சாலை விதிகளை மீறி சசிகலாவுக்கும், இளவரசிக்கும் 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அறைக்கு 4 பெண் கைதிகள் இருக்க வேண்டிய சூழலில், சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கியதால் மற்ற அறைகளில் கூடுதலாக பெண் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், சசிகலா இருந்த அறைக்கு திரைச்சீலைகள் போடப்பட்டிருந்தது குறித்த கேள்விக்கு, அறைக்குள் பூனைகள் நுழைவதை தடுப்பதற்காகத்தான் திரைசீலைகள் போடப்பட்டது என சிறை அதிகாரிகள் பதிலளித்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் சமையலுக்கு தேவையான குக்கர் உள்ளிட்ட பொருள்கள் சசிகலா அறையில் இருப்பதாக ரூபா புகார் கூறியிருந்த நிலையில், அதுகுறித்தும் குழு ஆய்வு நடத்தியது. அப்போது குக்கர் உள்ளிட்ட பொருள்கள் இல்லாத நிலையில், அறையில் சமையலுக்கான மஞ்சள் தூள் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சிறையில் சசிகலாவுக்கு தனியாக சமையல் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும், சசிகலா, இளவரசி ஆகியோர் கைப்பையுடன் வெளியே சென்றுவந்த வீடியோ குறித்து உயர்மட்டக்குழு விசாரணை நடத்தியது. அதன்படி அவர்கள் பார்வையாளர்களை சந்தித்தாக கூறி சிறை நிர்வாகம் அளித்த நேரத்திற்கும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவான நேரத்திற்கும் வேறுபாடு உள்ளதாக குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் வழங்கியது தொடர்பான விசாரணையின்போது, நீதிமன்றம் உத்தரவிட்டதாக எண்ணி சலுகைகள் வழங்கியதாக சிறைத்துறையினர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறை வளாகத்தில் சொந்த உடை அணிய சசிகலாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அக்குழு, இதுபோன்று பல்வேறு விதிமீறல்கள் நடந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.