amritpal singh file image
இந்தியா

சரணடைந்த அம்ரித்பால் சிங்.. பக்காவாக ஸ்கெட்ச் போட்ட பஞ்சாப் போலீஸ்! பின்னணியில் இருந்தது யார்?

பஞ்சாப்பைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங், இன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டு, அசாமில் உள்ள திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கின்றன.

Prakash J

பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் தே' தலைவராக உள்ளார். கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, பஞ்சாப்பில் உள்ள அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்ட 'வாரிஸ் பஞ்சாப் தே' அமைப்பினர், துப்பாக்கிகள் மற்றும் வாட்களை ஏந்திப் போராட்டம் நடத்தியது, பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, பஞ்சாப்பில் தனி நாடு முழக்கமும் அதிகரித்தது.

இதில் தலைமறைவான, அம்ரித்பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் காவல் துறை தீவிரம் காட்டியது. இதைத் தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், அம்ரித்பால் சிங் தோற்றங்களை மாற்றியபடி வெவ்வேறு பகுதிகளுக்குத் தப்பிச் சென்றதாகப் போலீஸார் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பின்பு இன்று (ஏப்ரல் 23), மோகா மாவட்டம் ரோடே கிராமத்தில் உள்ள குருத்வாராவில் சரணடைந்தார். அப்போது, அம்ரித் பால் சிங்கை போலீசார் கைது செய்தனர். அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அம்ரித்பால் சிங்கை அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார் சிறைக்கு போலீசார் கொண்டுசென்றுள்ளனர். அவருடன், மேலும் 9 காலிஸ்தான் ஆதரவாளர்கள் அசாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்ரித்பால் சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளதால், அவரை எந்த விசாரணையும் இன்றி ஒரு வருடம் வரை சிறையில் வைக்க முடியும் எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், இவ்விவகாரம் தொடர்பாக எவ்வித வதந்தியையும் பரப்ப வேண்டாம் எனவும், மக்கள் அமைதி காக்குமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

”அமிரித்பால் சிங் தலைமறைவானதால், அவரைக் கைது செய்வதற்கு போலீஸார் தீவிரமாய் தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆனால், அவர் சிக்கவில்லை. இந்த நிலையில்தான் அம்ரித்பால் சிங்கின் மனைவியான இங்கிலாந்தைச் சேர்ந்த கிரண்தீப் கவுர், காவல் துறை மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டார். இந்தியாவில் வசித்துவரும் கிரண்தீப் கவுரின் விசா, வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இதைப் புதுப்பிக்கும் நோக்கில், அவர் சமீபத்தில் லண்டனுக்குப் புறப்படுவதற்காக அமிர்தசரஸ் விமான நிலையம் சென்றபோது காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

தனது மனைவி முதலில் நாட்டைவிட்டு பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்று என அம்ரித்பால் சிங் விரும்பியுள்ளார். ஆனால், அவர் நாட்டைவிட்டு வெளியேறினால், அவர் கைது செய்யப்படுவார் என்ற பயமும் அம்ரித்பால் சிங்கிடம் இருந்துள்ளது. அதனாலேயே அம்ரித்பால் சிங் இந்தியாவைவிட்டு வெளியேறவில்லை எனவும், இந்த சூழல் காரணமாகவே அவர் போலீஸில் சரணடைந்திருக்கலாம்” என பஞ்சாப் அரசின் உயர்மட்ட வட்டாரங்கள் கூறுகின்றன.